பஞ்சாபில் மானோ மாஜரா என்ற கிராமம். அங்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில் நிகழ்கிறது கதை. சீக்கியர்கள் முஸ்லீம்கள் வாழும் இக்கிராமத்தில் ராம்லால் சேட் என்ற ஒரேயொரு இந்து வாழ்கிறார்.
மல்லி எனும் சீக்கிய கொள்ளையனும் அவனது கூட்டாளிகளும் ராம்லால் சேட்டை கொலை செய்கிறார்கள். அதன் பலியை ஜக்கா எனும் இன்னொரு கொள்ளையன் மீது போடுகிறார்கள். அவன் ஜெயிலுக்குச் செல்லும் நிகழ்வின போதே அவ்வூருக்கு இக்பால் எனும் பெயர் கொண்ட இளைஞன் வருகிறான். அவனது அரசியல் புரிதலில் உள்ள அரிச்சுவடி கூட அந்த பஞ்சாப் கிராம ஜனங்களுக்குத் தெரியவில்லை.
அவர்களுக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது தெரியாது. பாகிஸ்தான் பிரிவினைப் பற்றி புரியாது. “அரசியல் சுதந்திரம் என்பது ஒரு மாயை. அதைப்பொருளாதார சுதந்திரமாக மாற்றுவது தான் நம்முடைய வேலை” என்பது இவர்களுக்கு அறவே தெரியாது” இதை கம்யூனிச இளைஞனான இக்பால் உணர்கிறான். ஆனால் அவ்வூரிலுள்ள ஒருவர் மட்டும் இக்பாலிடம்
“வெள்ளக்காரங்களை விட நம்மாள்க்க மோசம் . வெள்ளக்கார அம்மாட்ட வேலை செஞ்ச ஒரு பொம்பளைக்கு வெள்ளைக்காரி இப்ப கூட பணம் அனுப்புனா. வேலைக்காரியோட மக கல்யாணத்துக்கு. நம்மூர்ல யார்னா அப்படி இருப்பாங்களா? சுதந்துரத்தால எங்களுக்கு என்ன கிடைக்கப் போது? ஒங்களை மாதி படிச்சப் புள்ளைங்க வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன உத்தியோகத்தைப் பட்னு பிடிச்சிப்பீங்க. எங்களுக்கு காணி நிலம் கிடைக்குமா? இல்ல மேய்ச்சலுக்கு ஒருமாடு தான் கிடைக்குமா?” என்ற புரிதலோடு அவர் பேசுகிறார்.
சுதந்திரம் கிடைத்தப் பிறகு அதைப் பெரும் சாதனையாக எண்ணி பல தலைவர்கள் பூ தூவி மகிழும் போது தான், இந்தியா பாகிஸ்தானின் பிரிவினையால் பெரும் மதக்கலவரம் தலைவிரித்தாடியது. முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கிர்யகள் கொலைவெறியோடு திரிந்தார்கள். ஆனால் இவற்றைப் பெரிதாக உணராத மனோ மாஜரா கிராமத்தில் சீக்கியர்களும் முஸ்லீம்களும் ஒருதாய் உறவுகளாய் வாழ்கிறார்கள்
அந்த இணக்கமான வாழ்வில் ஒரு ரயிலும் அதில் வரும் சீக்கியர்கள் இந்துக்களின் பிணங்களும் பெரும் கோரத்தை ஏற்படுகிறது. அதன்பின் அக்கிராமத்திலுள்ள முஸ்லீம்களை சீக்கியர்களே நமக்குள் கலவரம் வந்துவிட வேண்டாம் என முடிவெடுத்து முஸ்லீம்களை அகதிகள் முகாமுக்கு போகச் செல்கிறார்கள். அவர்களும் சம்மதிக்கிறார்கள். ஆனால் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது தேசம். அப்படி முஸ்லீம்கள் செல்லும் ரயிலை கூண்டாடு அழிக்க முனைகிறது சில மனிதவெறி பிடித்த ஜந்துக்கள்.
முடிவில் மதம் ஜெயிக்கிறதா..மனிதம் ஜெயிக்கிறதா? என நாவல் பறக்கிறது. கடைசி பத்துப்பக்கங்களை நெஞ்சில் கை வைத்தபடியே வாசித்தேன். இதயத்தை சுண்டிப்போக வைத்த எழுத்து. குஷ்வந்த் சிங் நாவலை இப்போது தான் வாசிக்கிறேன். ஆகச்சிறப்பாக நூலை தமிழ்ப்படுத்தியுள்ளார் ராமன் ராஜா
நாவலில் நிறைய மனிதர்கள் வாழ்வு மீதான நம்பிக்கையை தருகிறார்கள். குறிப்பாக நாவலின் இறுதிக்கட்டத்தில், மாஜிஸ்திரேட் ஹுகத் சந்த், ஜக்கா எடுக்கும் முடிவுகள் எமோஷ்னல் தரிசனம்
“செத்துப்போனால் மக்கிப் போகும் உடலை வைத்துக் கொண்டு இத்தனை வெறி ஏன்டா டேய்?” என கேட்பதோடு அறிவு சார்ந்த நிறைய புரிதலை தருகிறது நாவல்
இந்த நூலை பரிந்துரைத்து பரிசளித்த தோழர் அந்திமழை பிரகாஷுக்கு D Prakash அன்பும் நன்றியும்

