பிரமிள் கவிதைகள்- நூல் விமர்சனம்

படிமம் என்ற வார்த்தையே எனக்கு அலர்ஜி. கவிதை வாசிப்பு எளிமையானதாக இருந்தால் மட்டுமே என் விரல்கள் பக்கங்களை ஆர்வமாகப் புரட்டும். படிமம், நவீன சொல்லாட்சி என போனால் கடனே என வாசித்துச் சேர்ப்பேன். கடனே எனத்தான் பிரமிள் கவிதைகளை அணுகினேன். ஒருமுறை வாசித்து உள்வாங்க முயற்சித்துத் தோற்றேன் பிரமிளிடம். ஆனால் இம்முறை அவர் என்னை ஆரத்தழுவிக்கொண்டார்

“சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” என்ற கவிதையில் சுண்டி இழுத்த பிரமிள் அடுத்தடுத்து தந்தவை அனைத்துமே இலக்கிய தரிசனம்

இடம் எனும் தலைப்பில் ஒரு கவிதை..

“மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம் தான் வெளி”
மனதின் பிரம்மாண்டம் மரணத்தின் அளவிற்கு வீரியமிக்கது. மனம் தான் உலகம், மனம் தான் வாழ்வு, மனம் தான் அழுக்கு, மனம் தான் கடவுள் மனித வாழ்வின் மொத்தமும் மனத்தில் தான் இருக்கிறது. மனம் பற்றி பிரமிள் தனிக்கவிதை எழுதவில்லை. ஆனால் எல்லாக்கவிதைகளும் நம் மனம் பற்றியே நடக்கிறது

கனவு கண்களாயிற்று என்று எழுதும் பிரமிள் வாழ்வின் நிலையாமையைச் சொல்கிறார்..👇

“காலிடறும் கல்லும் ஒருநாளில்லை ஒருநாள்
காலனுருக் கொள்ளும்”
காலன் எத்திசை வருவான், எவ்வுரு கொள்வான் என்பது தான் வாழ்வின் இருண்ட ட்விஸ்ட். அதை எண்ணியாங்கு இயங்குவதே பயணத்தை இலகுவாக்கும். ஒரு மனிதன் வாழ்வைப் படிப்பதற்கான முதல் பாடம் மரணத்திடமே உண்டு.

நம்மால் எதை ஜெயிக்க முடியாதோ அதைப்பற்றி யோசிக்க மாட்டோம். பிரமிள் போன்றோர் யோசிக்கச் சொல்கிறார்கள். அந்த யோசனை வாழ்வை அர்த்தப்படுத்தும் ஆழம் கொண்டது.

பல கவிதைகள் மீள் வாசிப்பை கோரும் கடினம் கொண்டவை தான். கடினம் இன்றி கச்சிதம் அமையாதல்லவா?

பிரமிள் சொல்கிறார்..

“கருகித்தான் விறகு தீயாகும்
அதிராத தந்தி இசைக்குமா?” கரெக்ட் தானே!

கருகி விறகானால் உருகி விருந்தாகலாம்
அதிரும் தந்தியானால்
உருக்கும் இசையாகலாம்

ஆவோம்❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *