துணையெழுத்து- நூல் விமர்சனம்

‘அனுபவமே கடவுள்’ என்பார் கண்ணதாசன்
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு வாழ்வை கொண்டவர்கள். அவர்களின் வாழ்வோடு கணநேரம் செலவிட்டாலும் நமக்கொரு அனுபவம் கிடைக்கிறது. படைப்பாளிக்கு அந்த அனுபவம் தான் படைப்பிற்கான கிரியா ஊக்கி. எஸ்.ரா அவர்களின் அனுபவங்கள் கொடுப்பனை மிக்கவை. அதனால் தான் இந்த நூலில் இத்தனை வீரியமிக்க மனிதர்களும் கதைகளும் சாத்தியப்பட்டுள்ளது

சமீபத்தில் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூர் போயிருந்தேன். ஒரு செட்டியார் தம்பதியின் 60-ஆம் கல்யாண நிகழ்வு. அந்நிகழ்வில் சூப்பர் சிங்கர்ஸின் கச்சேரி. கச்சேரியை தொகுத்து வழங்கும் பணி என்னுடையது. எங்களுக்கு தங்குவதற்காக ஒரு பெரிய வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்கத்திலே இன்னொரு பெரிய வீடு இருந்தது. காலை உணவு முடித்து துணையெழுத்தை வாசிக்கத் துவங்கினேன். எஸ்.ரா காரைக்குடி பள்ளத்தூரிலுள்ள ஒரு செட்டியார் குடும்பத்தைப் பற்றியும், அவர்களின் வீட்டைப் பற்றியும் எழுதியிருந்தார். பள்ளத்தூர் பழ.பழனியப்பன் அய்யா வீடு அது. உடனே அவரிடம் பேசி வீட்டைச் சென்று பார்த்தேன். மற்றொரு வீட்டை இடித்து விட்டதாகச் சொன்னார். வாழும் வீட்டிற்கு உள்ள கதையை விட வாழ்ந்த வீட்டிற்குள்ள கதை நிச்சயம் வலிமிக்கது. எஸ்.ரா எழுதிய இடத்தையும் தடத்தையும் சென்று பார்த்த நிகழ்வு சிலிர்க்க வைத்தது

குற்றாலத்திற்கு குளிக்கச் சென்று நண்பனை இழந்த சம்பவத்தை எஸ்.ரா விவரிக்கும் போது குற்றாலம் பக்கத்தில் தான் இருந்தேன். நெஞ்சை உடைய வைத்த எழுத்து அது.

வீட்டு வேலைக்காரராக வந்து, குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனா சாராதாம்பாள் எனக்கும் வாய்த்திருக்கிறார்.

உடைந்த நட்பிற்குப் பின்னாலுள்ள காரணங்களும் காரணமில்லாமையும் எப்போதும் வலி தரக்கூடிய ஒன்று. நட்புப் பற்றிய எஸ்.ராவின் அனுபவம் எல்லோருக்குமானது

பற்றிக்கொள்ள தந்த துடுப்பை, சட்டென விலக்கிக் கொண்டால் வரும் இயலாமை பெரும் கோபத்தை கொண்டுவரும். இயலாமை பெற்றெடுக்கும் தொல்லை தான் கோபம். கோபம் விளைவிக்கும் ஆபத்து மிகமிக அதிகம். உதவி இயக்குநர் ஒருவர் தன் அப்பா மீது கொள்ளும் கோபம் உடைய வைத்தது

நூலில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு பாடம்

இந்த துணையெழுத்தை வழித்துணையாகக் கொண்டால் இனி நீங்கள் சந்திக்கும் மனிதர்களை கவனத்தோடு பார்ப்பீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *