கேப் டவுன் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்லூரி. 55 வயதைக் கடந்த அவருக்கு காம உணர்வு மேல் எழும் சூழல் நிகழ்கிறது. தன் மகள் வயதையொத்த மெலனி எனும் மாணவியோடு உறவு வைத்துக்கொள்கிறார். வயது முதிர்ந்தவரோடு உறவு என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அந்த மாணவியின் தரப்பில், டேவிட் லூரியின் செயல் பெரும் குற்றமாக கல்லூரி நிர்வாகத்தின் முன் வைக்கப்படுகிறது. விசாரணைக்குழு டேவிட் லூரியை அழைக்கிறது. டேவிட் லுரி தான் செய்ததை ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். நடந்ததை நியாயம் என்றும் சொல்லாமல், அநியாயம் செய்தேன் என மன்னிப்பும் கேட்காத அவரது மனநிலை விசாரணைக் குழுவை விரக்திக்கு இட்டுச்செல்கிறது. பின் அவர் வேலையை இழக்கிறார். குற்றம் இதுதான் என்றால் குற்றத்திற்கான காரணியில் எங்கோ நியாயம் இருப்பதாக அவரது ஆழ்மனம் அவரை நம்ப வைக்கிறது. அதனால் வேலையை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்குச் செல்கிறார். அதன்பின் தனியாக ஒரு பண்ணை வைத்து வாழும் தன் மகள் லூஸியைச் சந்திக்கச்செல்கிறார். அங்கு அவளது பண்ணையை பராமரிக்கும் வேலையாளாக பெட்ரூஸ் என்ற ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஒரு குற்றம் புரியும் மகனும் இருக்கிறான். பெட்ரூஸை லூஸி முழுமையாக நம்புகிறாள். ஆனால் டேவிட் லூரிக்கு சக ஆண் என்பதால் அவன் மேல் சந்தேகம் எழுகிறது. பாதுகாப்பற்ற காட்டிலுள்ள அந்தப்பண்ணையில் பெரும் கொள்ளை நிகழ்கிறது. லூஸி மூன்று பேர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறாள். டேவிட் லூரியால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு அடுத்து நிகழும் சம்பவங்கள் எல்லாம் நாம் யோசிக்காதவையாக இருக்கின்றன. முழுக்க முழுக்க மன விசாரணை செய்யும் உரையாடல்கள் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது
தான் செ*க்ஸ் வைத்துக்கொண்ட மாணவியின் பெற்றோரைச் சந்திக்க டேவிட் லூரி செல்கிறார். மனமெங்கும் அவர் மெலனியை நினைத்துக்கொள்கிறார். அங்கு சென்று மெலனியின் பெற்றோரை எதிர்கொள்ள இயலாமல் உடைகிறார். தன் மகள் லூஸிக்கு நடந்த வன்புணர்வு கொடூரம் அவரது மனதை கொஞ்சம் மடை மாற்றம் செய்கிறதோ என இந்த இடத்தில் புரிந்து கொள்ள முடிகிறது
நம் வாழ்வு மட்டுமல்ல..பிறர் வாழ்வும் நாம் நினைக்கும் திசையில் செல்வதில்லை. மனதுக்கும் உடலுக்கும் ஏகப்பட்ட சம்பந்தம் உண்டு. பொருந்தாக்காமம் நிச்சயம் வருந்தச் செய்யும் என்றாலும், அது நிகழும் போது நிகழ்த்துபவர்களால் பின் வருவதை அறிந்து தடுக்க முடிவதில்லை.
இதுதான் மனிதனின் பலவீனமும் இயற்கையின் பலமும்
ஜே.எம்.கூட்ஸி எழுதிய நாவலை ஷஹிதா பிரமாதமாக தமிழ்ப்படுத்தியுள்ளார். எதிர்வெளியீடு சிறப்பாக பதிப்பித்துள்ளது. இந்தச் சிறந்த நாவலைப் பரிந்துரைத்த எழுத்தாளர் நண்பர் செந்தில்ஜெகன் நாதன் வாத்தியாருக்கு நன்றிகள்🥰

