முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை தந்த நாவல். அடியேன் தென் மாவட்டக்காரன் என்பதால், சில குறிப்பிட்ட சாதிச்சண்டைகளை பார்த்திருக்கிறேன்! இந்த நாவலில் செட்டியார்களுக்கும் கவுண்டர்களுக்குமான மோதலின் வீரியத்தை பதைபதைப்போடு வாசித்தேன். துங்கபத்ரை நதிக்கரையில் செளடஸ்வரியை வழிபட்டு தறிநெய்து வாழ்ந்து வந்த ஒரு இனக்குழுவை (செட்டியார் இனம்) காசிம்கான் படைகள் அடித்து நொறுக்கிறது. உயிரை இழுத்துப்பிடித்து செளடேஸ்வரியின் சிலையோடு திருப்பூர் அருகே திரும்புகிறது செட்டியார் இனம்! ஒரு கிராமத்தில் தறிபோட்டு வேலை செய்து ஜீவனம் கழிக்கிறார்கள். பாவுக்கு நீரும் வாழ்வுக்கு நீரும் அவர்களுக்கு கவுண்டர்களின் கிணறுகள் மூலமாகத் தான் கிடைக்கிறது. அதனால் கவுண்டர்களை அனுசரித்து செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது செட்டியார் இனத்துக்கு!
கொடுப்பவர்களுக்கு எப்போதுமே ஆழ்மனதில் பெருபவர்கள் குறித்து ஒரு இழி எண்ணம் இருக்கும்! அந்த எண்ணம் வலுப்படும் சூழல் உருவாக, இரு இனத்திற்கும் பகை நீருபூத்த நெருப்பாக வளர்கிறது. பெரியாரிடமிருந்து விலகி அறிஞர் அண்ணா அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் நடக்கிற கதை இது. கதையின் போக்கிலே நமக்கு வாசிக்க கிடைக்கும் அரசியல் தகவல்கள் வாசிப்பை ஆர்வமாக்குகிறது
சரி அம்மன் நெசவு என்றால் என்ன?
ஒரு தறிக்காரன் தனது வீட்டில் நெய்யும் புடவையில் அம்மன் உருவச்சித்திரமாக குடிபுகுந்தால் அந்தப்புடவையை அம்மன் நெசவு என்பார்கள்.
நாவலில் நுட்பமான கேரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உளவியலை செம்மையாக எழுதியிருக்கிறார் எம்.கோபாலகிருஷ்ணன்
அருமையான நாவல்!
பரிந்துரைத்த நண்பர் எழுத்தாளர் அய்யா செந்தில் ஜெகன் நாதனுக்கு நன்றிகள்

