“இதனை இவனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது வைரமுத்து அவர்களின் மொத்த உரையும்
வைரமுத்து அவர்களின் இசைப்பாட்டு மீசையில் நரை எட்டியதேயில்லை. அவை எப்போதுமே இளமையாகவே இருக்கும். அதேபோல் வள்ளுவர் மறைக்கு அவர் எழுதிய உரையிலும் நரை என்பதே இல்லை. மிகவும் எளிதாக பொருட்களை இதயத்தில் ஏந்திக்கொள்ளும் வண்ணம் உரை இயற்றியுள்ளார். இன்றைய தலைமுறையினர்க்கு ஏற்றாப்போன்ற சொல்லாட்சி எல்லா உரைகளிலும் நின்றாள்கிறது
“அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு” என்ற அன்பின் மேன்மையை தேவையை பறைசாற்றும் வள்ளுவர் மறைக்கு, “இந்த உலகத்தில் யாரொருவர் எல்லா வகையிலும் இன்புற்று வாழ்கிறாரோ, அவர் எல்லோரிடத்திலும் அன்புற்று வாழ்கிறார் என்று பொருள்” என உரை சாற்றுகிறார் வைரமுத்து. “சுருக்கச் சொல்லல் விளங்க வைத்தல்” என்ற இலக்கணத்தை மீறாமல் நிற்கிறது உரை😎😎
தனி ஒருவனாய் இருந்துகொண்டு பலரோடும் பகை கொள்ளும் ஒருவன், பித்தரை விட அறிவற்றவன் ஆவான்” என்று “ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்” என்ற குறளுக்கு அழகாக விளக்கம் தருகிறார்.
வீரம், பகை, நட்பு, ஈகை என எத்தனைப் பொருளில் வள்ளுவர் பாடி வைத்தாலும் அவரின் இன்பத்துப்பாலின் பக்கங்களைப் புரட்டும்போது பேரின்பம் பக்கம் நிற்பதாகவே உணர்ந்து லயித்தேன்😄😄 கூடவே கவிப்பேரரசுவின் காதல் ஆழம் சுட்டும் உரை ஆஹா ரகம். இன்பத்துப்பாலில் எந்த உரையையும் நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. காரணம்? நீங்கள் வாசித்து சுவைக்கவேண்டும் என்ற நல் நோக்கம் தான்
இன்றைய ஜென்ஸி கிட்ஸ்க்கு இந்த உரை இலகுவாக புரியும். வள்ளுவம் எவ்வளவு அழகென்று தமிழின் பெருமையும் விரியும்
அந்தப்பெருமைக்குச் சொந்தக்காரர் வைரமுத்து அவர்கள்😍

