மரண தண்டனையை பரிசீலிக்கச் சொல்லும் நாவல். ஒரு மரண தண்டனை கைதியின் மனதைத் தடவிப்பார்த்து எழுதியுள்ளார் விக்தோர் ஹ்யூகா. அந்தக் கைதி என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்தான் என்ற செய்தியை விட, மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு அவன் மனது என்னவெல்லாம் நினைக்கிறது என்பதை உயிரோட்டமுள்ள எழுத்தாக மாற்றியிருக்கிறார் பிரெஞ்ச் எழுத்தாளர் விக்தோர் ஹ்யூகோ. தமிழ்ப்படுத்தியுள்ள குமரன் வளவன் பணியை கூடுதலாக பாராட்ட வேண்டும்
சிறை சென்று பின் நல் வாழ்வு வாழ வெளியில் செல்லும் ஒருவன், வெளியே தனக்கு கிடைத்த அனுபவங்களை மீண்டும் சிறைக்கு வந்து பகிர்வான். ‘குற்றமிழைத்து பின் திருந்தி வாழ நினைப்பவனை எக்காலமும் குற்றவுணர்ச்சியோடு வாழ வைப்பது நல் சமூகத்திற்கு அழகல்ல’ என்பதை அந்த ஒரு கேரக்டர் மூலம் உணர்த்துவார் ரைட்டர்.
‘என்னை தூக்கிலிடுவார்கள். என் தாய்க்கு ஒரு மகன் இல்லை. என் மகளுக்கு ஒரு தந்தை இல்லை’ என்று புலம்பத் துவங்கி வாழ்வில் தான் சறுக்கியதை எல்லாம் நினைத்து வெம்முவான் நாவலின் ஹீரோவான அந்தக்கைதி. அவனை தூக்கிலிடும் நேரம் நெருங்க நெருங்க நம் மனது பதைபதைக்கத் துவங்கிவிடுகிறது. மரண தண்டனை தேவையா? வேண்டாமா? என்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்திருக்கும்.
குற்றத்திற்கு தண்டனை வேண்டும். தண்டனையிலும் கருணை வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு
மரணத்தைப் பக்கத்திலிருந்து பார்த்தால் வாழ்வின் மீதான பேராசை கொஞ்சம் விலகும். அந்த விலகல் பேரன்பை பெருக்கும். இந்த நாவல் அதற்கு அடிபோடுகிறது

