நண்பரும் எழுத்தாளருமான செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த மற்றொரு மாஸ்டர் பீஸ் இந்த நாவல்.
கதையில் சோவியத் செக்கோஸ்லோவேகியா மீதி படையெடுக்கும் காலம் வருகிறது. (1968) அக்காலத்தில் தேரேசா, தாம்ஸின் ஜோடியின் வாழ்வும் தாழ்வும் வருகிறது. கூடவே சபினா, ப்ரான்ஸ் ஆகியோரின் வாழ்வும்! மருத்துவரான தாமஸ் மணமாகி விவகாரத்து பெற்றவன். அவனின் மனம் கவரும் பெண்ணாக ஒரு பாரில் வேலை செய்யும் தேரேசா அறிமுகமாகிறாள். சந்தித்த சில நாட்களிலே சூரஜ் நகருக்கு தாமஸை தேடி வருகிறாள் தேரேசா. வந்தவுடன் இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். ஆல்ரெடி 200 பெண்களோடு உடல் ரீதியாக தொடர்பிலுள்ளவன் தாமஸ். 199 பெண்களிடம் காணாத உடலை அல்ல..உள்ளத்தை தேரேசாவிடம் காண்கிறான் தாமஸ். அல்லது கண்டதாக நம்புகிறான். தேரேசா தாமஸை விட்டு விலக நினைப்பதை பாவமென கருதினாலும் சில நேரம் அத்தகைய முடிவும் தனக்கு நல்லது எனவும் நம்புகிறாள். இவர்கள் கூட சரேனினா என ஒரு நாயும் உள்ளது. மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறித்தும், மனித உயிர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவை குறித்தும் நூலாசிரியர் மிலன் குந்தேரா சரேனினா நாய் மரணிக்கும் தருவாயில் விவரிக்கிறார். ஆஹா என்னவொரு தத்துவ விசாரணை. மனித உளவியலை கரைத்துக் குடித்துள்ளார். புகழேந்தி அவர்களின் மொழி பெயர்ப்பு தரம்
எனக்கு நாவலில் வியப்பை அளித்த பெண் தேரேசாவின் தாய் தான். தன் உடலுக்காக ஆண்கள் மண்டியிட்ட காலத்தை அவள் காணும்போது வாழ்வு நிரந்தர போதையென உணர்கிறாள். தன் இளமை உருகி மூப்பு தட்டி பற்கள் விழுந்து பொக்கை வாயோடு அவள் உலவும் போது தான் வாழ்வு கலைந்து செல்லும் கனவு என உணர்கிறாள். தன் அழகும் இளமையும் தன் கண்ணெதிரிலே கரைந்தோடும் போது வரும் இயலாமையும், எதார்த்தமும் அவளை எதோ செய்கிறது. அப்போது அவளின் பத்து வயது மகள் தேரேசாவை அவள் அணுகும் விதம் பகீர் ரகம்.
வாழ்வில் தாங்க முடியாத பாரம் வாழ்தலின் நாட்கள் எண்ணப்படுவதை உணரும் நிலை தான். அதைக் கச்சிதமாகப் பேசுகிறது நாவல். வாழ்வு என்பது பயணம். அதை இலகுவாக்கிக் கொள்வதில் நமது பங்கு கூடவே சமூகத்தின் பங்கும், பெண்பாலின் பங்கும் இருந்தாலும், நம் மனதை ஓரளவு பக்குவப்படுத்தினால் வாழ்வு பெரிதாக படுத்தாது
நல்ல நாவல்

