ஹேப்பிராஜ்- விமர்சனம்

அழகில்லாத அப்பா..அதுவொரு தப்பா? என்ற கேள்வியை எழுப்பி எமோஷ்னல் வேள்வி செய்துள்ளது ஹேப்பிராஜ்

ஜிவி பிரகாஷின் பள்ளி வாழ்க்கையிலிருந்தே அவரின் அப்பாவான ஜார்ஜ் மரியானின் தோற்றம் ஜிவியை மனரீதியாக முடக்குகிறது. குதிரைமுட்டை மகன் என பலரும் ஜிவியை நிராகரிக்க, காதலும் கை கூடாமல் போகிறது. அதனால் இனி வெளியூர் செல்லலாம் என முடிவெடுத்து பெங்களூர் ஐடி கம்பெனியில் சேர்கிறார். அங்கு நாயகி ஸ்ரீ கெளரிபிரியாவைச் சந்திக்கிறார். காதல் கைகூடும் சூழல் வரும்போது ஜார்ஜ் மரியான் மூலமாக ஒரு ட்விஸ்ட் அரங்கேறுகிறது. அதன்பின் ஜிவி வாழ்வில் காதல் என்ற அற்புதம் எப்படி நிகழ்கிறது என்பதே படத்தின் கதை

அப்பாவிற்கு பயந்த பிள்ளையாகவும், காதலியை விட இயலாது தவிக்கும் இளைஞனாகவும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார் ஜிவி பிரகாஷ். அப்பாஸிடம் ஒரு சீனில் பேசும்போது ஜிவி நடிப்பில் ஏகத்திற்கும் பிரகாசம். கிட்டத்தட்ட படத்தின் இணை கதாநாயகனாகவே வலம்வருகிறார் ஜார்ஜ்மரியான். துளியும் இயல்பை மீறாத அவரது நடிப்பு படத்திற்கு பெரும்பலம். ஸ்வீட் சர்ப்ரைஸ் அப்பாஸின் வருகை. தரமாக நடித்துள்ளார். நாயகி ஸ்ரீ கெளரிபிரியா நல்ல தேர்வு. ப்ரேக்கப் காட்சி ஒன்றில் பின்னியுள்ளார். மதுரை முத்து, அதிர்ச்சி அருண் ஒகே ரகம். கீதா கைலாசம் படத்தை சற்றுநேரம் காமெடி மோட்க்கு எடுத்துச்செல்கிறார்

சினிமாட்டகிராபி படத்திற்கு நல்ல மைலேஜை கொடுக்கிறது. கிராமத்தின் ஏரியல் ஷாட்கள் எல்லாமே நம்மை ஏங்க வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஜிவி பாடியுள்ள மன்னிப்பாயா பாடல் வாவ் ரகம். பின்னணி இசையும் படத்தை காப்பாற்றியுள்ளது

முன்பாதியில் படம் சற்று டல் மோட்-க்கு சென்றாலும், பின்பாதி அருமையான அனுபவத்தை தருகிறது. அப்பா மகன் செண்டிமெண்ட்-ஐ வேறோர் கோணத்தில் அணுகி, முழுக்க முழுக்க பாசிட்டிவ் அம்சத்தோடு படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மரியராஜா இளஞ்செழியன். இந்த வீக்-என்ட்-ஐ ஹேப்பியாக ஹேப்பிராஜுக்கு ஒதுக்கலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *