ஒரு வண்டு தேன்குடித்த பின் இளைப்பாறும் நிம்மதியையும், ஒரு காதலன் விஷம் குடித்து உயிர்விடும் துயரையும் ஒருசேர அனுபவிக்க முடியும் பிரான்சிஸ் கிருபா கவிதைகளில். பேருந்தில் செல்லும் எல்லா மனிதர்களும் இறந்து பூ பெட்டி ஒன்று உதிர்ந்து கிடக்கும் காட்சி ஒரு கவிதைக்குள் வந்தது. திடுக்கிட்டு விட்டேன். முத்தங்கள் பற்றிய விவரிப்பு வரும் ஒரு கவிதையில் இன்பச்சிலிர்ப்பு கொண்டேன். இப்படி எல்லா உணர்வுகளையும் கலந்து தரவல்லவர் பிரான்சிஸ் கிருபா
“வெளி நதியில்
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான் கண்டு கொண்டிருப்பது
எந்தப்பூவின் கனவோ” என்று ஒரு கவிதையை முடிக்கிறார். நான் வெளிநதியில் சிறகின் துடுப்பிசைக்கும் வண்டின் காட்சியை மட்டுமே அசை போடுகிறேன். நான்கு வரிகளுக்கு எம்மாம் பெரிய காட்சிகளை தந்திருக்கிறார்
மலரினும் மெல்லிய எனும் தலைப்பில்: “மழைக்குத் தெரியாமல் குடைக்குள் புன்னகைக்கிறாய்
கண்ணடித்து மன்னிக்கிறது மின்னல்” அட சொல்ல.வைக்கும் வரிகள் இவை
/என் கல்லறையைச் சில்லறை மாற்றி எனக்கே என்னை பிச்சையிட ஆரம்பித்தது உன் ஞாபகம்/ இந்த வரிகளுக்குள் மூழ்கிப்போனேன். அப்படியானால் கவிஞன் எப்படியெல்லாம் மூழ்கி தொலைந்திருப்பான். ஜெ.பிரான்சிஸ் கிருபா மரணத்தில் காலம் கருணையின்றி நடந்து கொண்டது. அவரும் காலத்திடம் கறார்த்தன்மையோடு இருந்துவிட்டார். காலமும் அவரும் சற்று சமாதான உடன்படிக்கைச் செய்திருந்தால் இன்னும் நமக்கு பேரதற்புதமான எழுத்து கிடைத்திருக்கும். மனதை கற்பனை கடலுக்குள் ஆழ்த்தி நீந்த வைப்பது போல ஒரு படைப்பாளன் உடலையும் பாதுகாத்து வைக்கவேண்டும். சமீபத்தில் குடியிலிருந்து முழுவதுமாக மீண்ட தனிப்பெரும் பாடலாசிரியர் அண்ணன் கார்த்திக் நேத்தா, ‘குடி ஒரு பெருஞ்சுகம் என்பது சும்மா தம்பி’ என்றார். அதிலே வாழ்ந்தவர் மீண்டு வந்து சொல்லும் இந்தச் சாட்சி மிக முக்கியமானது.
பிரான்சிஸ் கிருபா எனும் பெருங்கவிஞனை காலம் கடந்து தான் வாசிக்கிறேன்
/விறகும் நெருப்பும்
சாம்பல் விருப்பம்/ என்றெழுதுகிறார் கிருபா
அடுத்தச் சில வரிகளிலே
உறையும் நொடியில் உடையும் காலம் என்றெழுதுகிறார். இப்படி எழுத வேண்டுமானால் சித்தநிலையை பற்றும் மனம் வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும்.. அவருக்கு அது வாய்த்திருந்திருக்கிறது. நீடிக்கத்தான் இல்லை
கவிதை விரும்பிகள் தவறவிடக்கூடாத தொகுப்பு. மிகத்தரமாக நூலை உருவாக்கியுள்ளது டிஸ்கவரி பப்ளிகேசன்

