ரூமி கவிதைகள்- நூல் விமர்சனம்

1:
“காதலர்கள் இறுதியில் எங்கேனும் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் மற்றொருவராக இருந்து வருகிறார்கள் காலங்காலமாக”

2:
எவையெல்லாம் நான் தேடினேனோ அவையெல்லாம் என்றென்றும் நீயாகவே இருந்திருக்கிறாய்

3: அரைகுறை மனதிற்கு அகண்டவெளி அகப்படாது

4:வாழ்வெல்லாம் வேண்டிக் காத்திருக்கிறோம். மெய்தீண்டி ஊன் உருகும் அந்த ஒரு முத்தத்திற்காக

5: நிலவுக்கு வழி வாசல் அல்ல
சாளரமே

ரூமியின் கவிதைகளுக்குள் அடியேன் கண்டெடுத்து முத்துக்கள் மேற் குறிப்பிட்டிருப்பவை

ஒவ்வொரு நினைவுக்கும் ஒவ்வொரு சாளரம் உண்டு. எதை அதீதமாக நினைக்கிறோமா அந்தச் சாளரம் திறந்துகொள்ளும். ரூமியின் தெறிப்புகளில் நான் குறிப்பிட்டுள்ள இந்த 5 ஆவது கவிதை இப்படி வெகு நேரம் யோசிக்க வைத்தது.

நான்காவது கவிதையை முன் வைத்து “இதழ்வழிப்பாதை” என ஒரு கதையே எழுதியிருக்கிறேன். ஒரு முத்தம் என்பது சிலருக்கு மொத்த வாழ்வையும் அளிப்பதாக உள்ளது.

3-ஆவது கவிதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உணர்வதற்கு நிறைய இருக்கிறது. அதற்கு முன் நாம் அனைவரும் நம் மனதை ஏமாற்றாமலும், அல்லது ஏமாற்றும் மனதை நம்பாமலும் நம்மோடு பேச வேண்டும். நமது மனதின் நீளம் எவ்வளவென்பதை அறிவது அகண்ட வெளிக்கு வித்திடும் வித்தை என்பேன்

2-ஆவது கவிதையை பெருங்காதலில் விழுந்தெழுந்த ஒவ்வொரு காதலனும்/காதலியும் உணர வாய்ப்புண்டு.. (கவனிக்கவும்..காதலில் விழுந்து எழுந்தவர்களுக்கு மட்டும்)

1-ஆவது வரிகள் நித்திய தன்மையுடையது. கிட்டத்தட்ட இது ரூமியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக விளைந்த வரிகளாக இருக்கலாம். ஷம்ஸ் என்பவரின் நட்பையும் துணையையும் கடவுளின் நிழல் போல் எண்ணுகிறார் ரூமி. அவரின் பிரிவை எண்ணி மிகவும் துன்புறும் ரூமி, ஒரு கட்டத்தில் அவரை வெளியில் தேடாமல் அவர் தன் உள்ளே இருப்பதாக உணர்கிறார். மீளாக்காதல் அப்படித்தானே எண்ண வைக்கும்

என்.சத்தியமூர்த்தி மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அவர் ரூமியின் கவிதை மனதை குறிப்பிடும் போது, “மீளாத்துயர் தரினும் தாழாத காதலில் என்றும் திளைத்திருக்க விழையும் பேராவல்” ரூமியின் மனநிலை என்கிறார். ரூமியை ஊன்றி வாசிக்கும் எவராலும் இதை உணர முடியும். அடியேன் ஊன்றி வாசித்தேனா எனத்தெரியவில்லை. ஆனால் ரூமி பேசும் காதலை நானும் கடந்து வந்தவன் என்பதால், கடந்த காலத்தை மனதிற்குள் பிறப்பித்துக் கொண்டேன். சில கண்ணீர் ரணங்களும், இன்ப கணங்களும் தோன்றி மறைந்தன.

Good one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *