மூன்று பாகங்களாக விரியும் இந்த நாவல் பாசிசம் எங்கிருந்தாலும் ஒழிக என்ற கோசத்தை எழுப்புகிறது. இவற்றை நேரடியாகச் சுட்டாமல் போகிற போக்கில் நமக்குள் இக்கருத்தை ஏற்றுகிறது. ரொக்கிராஜ் என்பவனை இந்திய அமைதிப்படை “இயக்கத்தவன் எனப் பிடித்துக்கொள்கிறது” அவர்களிடம் இருந்து மீண்ட ரொக்கிராஜை இயக்கம் சந்தேகத்தோடு அணுகுகிறது. அதன்பின் அவனை இலங்கை ராணுவம் போட்டுப்பொளக்கிறது.
இலங்கை ராணுவத்தாலும் தமிழ்ப்போராளிகளாலும் பாதிக்கப்பட்ட அந்தோணி என்பவர் பிரான்ஸில் தனக்கு அகதிக்குடியுரிமை வேண்டும் என கடிதம் எழுதுகிறார். இந்தக் கதைதான் முதல் பாகமாக இருக்கிறது. இந்தப்பாகம் பேசும் நிஜத்தில் நிறைபேர்களுக்கு நெருடல் இருக்கக்கூடும். ஆயினும் இது உள்ளதைப்பேசுகிறது
மூன்றாம் பாகத்தில் வரும் எலைட் அகதியான லொக்கா என்பவரின் கேரக்டர் விநோதமானது. அவர் ஓரிடத்தில் சொல்கிறார், “இலங்கைக்கு ஒரு மகாத்மா தேவை என்று”
(பிரின்ஸி என்ற ஒரு ‘பெண்புலி’ மாணவி இந்திய அமைதிப்படையினர் அலுவலகத்திற்குச் செல்கிறாள். அங்குள்ள மேஜருக்கு அவளின் மார்புமீது பெருங்கவனம் ஏற்படுகிறது. மறுகணம் அதை உணரும் பிரின்ஸி “இயேசுவே ரட்சியும்” என்றபடி மேஜரைக் கட்டிப்பிடிக்கிறார். அவள் மார்புக்குள் வைத்திருந்த பாம் வெடிக்கிறது. உரிமை வேட்கையின் தன்மான வடிவம் இது. இப்படியான பல நிஜ சம்பங்கள் நாவலுக்குள் கதையோடு உலா வருகிறது)
1970, 90களின் போராட்டதில் சாட்சியாக இருந்தவர் ஷோபாசக்தி என்பதால் நாவலில் அவர் சொல்லும் அத்தனையும் நெஞ்சுக்கு நெருக்கமாக பதிகிறது. இன்னும் நிறைய விசயங்களை அவர் தவிர்த்து எழுதியிருப்பது புரிந்துகொள்ள முடிகிறது. கதைகளை சம்பவங்களை முன்பின்னாக மாத்திப்போட்டு எழுதியிருப்பதால் சற்று அயர்ச்சியை வழங்குகிறது நாவல். எனினும் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் நாவலில் நிறைய உண்டு
நாவலை பரிந்துரை செய்த நண்பர் எழுத்தாளர் செந்தில் ஜெகன் நாதனுக்கு நன்றி

