பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம்

15 வருடங்களுக்கு முன்பு ஒருமுறையும் எட்டு வருடங்களுக்கு முன் மறுமுறையும் என இருமுறை இந்த நூலை வாசித்துள்ளேன். இது மூன்றாம் முறை. “பெண்களின் பொருளாதார சுதந்திரம் தான் அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க உதவும் வழி” என்ற பெரியாரின் கூற்று இன்று உறுதியாகியுள்ளது. பெரும்பாலான பெண்களும் பெற்றோர்களும் அவற்றை உணர்ந்துள்ளனர்.

“பிள்ளய நாலெழுத்து படிக்க வச்சிட்டு அப்டியே கல்யாணம் கெட்டிக் கொடுத்துருக்கூடாதுய்யா. நாலு வருசம் வேலைக்கி அனுப்பணும். அப்பந்தான் கையில துட்டு பெரளும். துட்டு பிள்ளைக்கு ஒரு தைரியத்த குடுக்கும். நாளபின்ன புருசன் சரியில்லன்னாலும் பிள்ள தனியா நின்னு சமாளிச்சிக்கிடுவா” இதை எங்க ஊரில் ஒரு அண்ணன் சொன்னார். அவ்வளவு சந்தோசமாக இருந்தது. இதே அண்ணன் ஒரு காலத்தில் “படிச்ச உடனே எவன் தலையிலயாவது கட்டி வச்சிரணும்” என்றவர்.

அடிமைத்தளை அற்ற ஒரு பெண்ணின் வளர்ச்சி அவளை மட்டுமின்றி சமூகத்தையும் ஓர் அடி முன்னே நகர்த்தும். அதனால் பெண்களின் கல்வி வேலை ஆகியவற்றில் பெரியாரின் கனவு நனைவாகி வருகிறது. அதே சமயம் பெரியார் காதல் குறித்தும், பெண்களுக்கான சொத்துரிமை குறித்தும் எழுதியிருப்பது இன்னமும் தேவைப்படுகிறது. சாதி தோன்றி 2000 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அதற்கான போராட்டம் இருப்பது போல, பெரியார் 1930-ல் எழுதிய மேற்சொன்ன இரண்டு விசயங்கள் இப்பவும் தேவையாய் இருக்கிறது.

ஒரு படப்பிடிப்பில் “பெண்களுக்கு சொத்துரிமை என்பது தேவையான ஒன்று தான்” என்றேன். திராவிட கொள்கைகளை பின்பற்றும் ஒரு நடிகர் அதே படப்பிடிப்பில் வைத்து என்னிடம் சீறிவிட்டார். “சொத்தை பொட்டப்பிள்ளைக்கு பங்கு வச்சிட்டா ஆம்பளப் பசங்க என்னப்பா பண்ணுவாங்க. பொட்டப்பிள்ளைக்குத் தான் நகபோடுறோம் .. சீர் செய்றோமே” என்றார். நான் அப்படியே ஆப்!

அதேபோல் காதல் என்பதை தெய்வீகம் ரேஞ்சிற்கு பில்டப் செய்து அதன்மூலம் பெண்களை மூளைச்சலவை செய்யும் போக்கு இன்றும் இருக்கிறது. படித்த பெண்களே அந்த உளவியல் வளைக்குள் சிக்கிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. காதலுக்கு ஆப்சனே இல்லை என்ற எண்ணத்தை தோன்ற வைக்கும் வித்தை ஆண்களுக்கு நன்றாகவே வரும். இன்றைய ஜென்ஸி காலத்திலும், ஆணுக்கு நான்கு கேர்ள் பிரண்ட் இருப்பதை பெருமையாக பார்க்கும் போக்கு இருக்கிறது. ஒரு பெண் தன் காதலன் தவிர்த்து நண்பனிடம் சகஜமாக பேசினாலே வேறு விதமாக கமெண்ட் அடிக்கிறார்கள். காதல் என்பது மிகவும் இயற்கையான ஒன்று. அதை மலினப்படுத்தவோ புனிதப்படுத்தவோ தேவையேயில்லை

பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார். ஒருசில விசயங்களில் மட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *