நூர்- நூல் விமர்சனம்

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்கு தாமதம் பிடிக்கும்” என்பது கண்ணதாசன் வாக்கு. இந்த நூலை எழுதிய தம்பி நூருல் ஹசனுக்கும் தாமதம் மேல் பெருங்காதல் ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன். நாகூரில் பிறந்த நூருல் ஹசன் இஸ்லாமிய வழிமுறைகளை தீர்க்கமாக கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறக்கிறார். கல்லூரி படிப்பின் போதே தந்தையை இழக்கிறார். குடும்பத்தின் உதவி இருந்தாலும், சினிமாவின் மீதுகொண்டு காதலால் கஷ்டங்களை இஷ்டப்பட்டு ஏற்கிறார். இத்தனை இடர்பாடுகளில் நூருல் ஹசன் ஆன்மிகத்தை மட்டும் கைவிடவே இல்லை. குறிப்பாக ஆன்மிகமும் அவரை கைவிடவேயில்லை. (இடையில் தீவிர கடவுள் மறுப்பாளராகவும் எதிர்ப்பாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது ஒரு இறை முரண்)

ஆன்மிகத்தை நோக்கி நகர்வதற்கான முதல் படி அன்பு என்றால் முக்கியமான படி பொறுமை. இவ்விரண்டையும் ஒருங்கேபெற்ற நூருல் ஹசன் சிறந்த ஆன்மிகவாதியாகத் தெரிகிறார்!

நம்மைப் போன்ற ஒரு எளிய மனிதன் அக உலக பயணத்தில் மேல் ஏறி நிற்கிறான் என்பதே நமக்கு பெரும் பாசிட்டிவிட்டியைத் தருகிறது. இந்த நூல் பக்தியைச் சொல்லும் அளவிற்கு பகுத்தறிவையும் ஊட்டுகிறது. அய்யா வைகுண்டர், “இல்லறத்தை விட்டு தவம் என்பதே இல்லை” என்கிறார். நபிகளார் இல்லறத்தானாய் இருந்து தான் ஆன்மிக முக்திக்குச் சென்றார் என்பதைப் பார்க்கிறோம். நூருல் ஹசனும் அதையே வலியுறுத்துகிறார். மேலும் வாசிப்பு பழக்கமும் ஆன்மிகத்திற்கு அவசியம் என்கிறார். எனக்குத் தெரிந்த சில ஆன்மிகவியாதிகள் இருக்கிறார்கள். தங்களிடம் பாடம் கற்க பக்தராக வரும் மக்களிடம் அவர்கள் சொல்லும் வார்த்தை, “எதையும் படிக்காதீங்க.. படிப்பு அறிவு சார்ந்தது அது ஆணவத்தை வழங்கும். இங்கு சரணடைதல் மட்டுமே முக்தியைக் கொடுக்கும்” என்று முக்குவார்கள். நாலு புக் படிச்சி கேள்வி கேட்டுட்டா அவங்க வசூல்ல தூசி விழுந்துருமில்லையா ?

மேலும் இந்த நூல் மூலமாக சூஃபிக்களின் செயல்பாடுகள் குறித்தும், இஸ்லாமிய மதத்தில் குரு சிஷ்யர்கள் முறை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிய முடிந்தது

முதலும் முடிவும் முன்பே தீர்மானிக்கப்பட்ட இந்த வாழ்வில் நெகட்டிவிட்டியைச் சேர்க்காமல் பயணிப்பதே சாலச்சிறந்தது. அதை இப்படியான நூல்கள் சொல்லித்தருவது கூடுதல் சிறப்பு

நூலாசிரியர் தம்பி மற்றும் வருங்கால சூஃபி நூருல் ஹசனுக்கு வாழ்த்துகள்🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *