எழுத்தின் வழி நிகழ்வைச் சொல்வது வேறு. அந்நிகழ்விற்கு நம்மை அழைத்துச் செல்வது வேறு. அண்ணன் அதிஷா நிகழ்வுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறவர். விகடனில் அவர் எழுதிய ‘சொல் அல்ல செயல்’ , சர்வைவா ஆகிய இரண்டு தொடர்களை வாசித்திருக்கிறேன். சொல் அல்ல செயல் தொடரின் ஒரு அத்தியாயத்தில் வரும் ஒரு ATM செக்யூரிட்டி இன்னும் என் மனதில் வாழ்கிறார்.
அதிஷா அண்ணனின் இந்த மெளனம் சரணம் நூல் முற்றிலும் தனித்துவமானது.
புத்தர் அறிமுகம் செய்த தியானமுறைகளை பத்து நாட்கள் வெளியுலக தொடர்பற்று கற்றுக்கொண்டதையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் பலன்களையும் எழுத்தாக்கியுள்ளார். நூலுக்கு மெளனம் சரணம் என்ற தலைப்பு சாலப்பொருத்தம்
விபாசனா என்று சொல்லப்படும் இந்தப் பயிற்சிக்கு அவர் தயாரானதைச் சொல்லி முதல் நாள் முகாமிற்குள் அவர் செல்லும் போது நாமும் கூடவே சென்று விடுகிறோம்
செல்போன் அனுமதி கிடையாது. யாரிடமும் பேசக்கூடாது. வாசித்தலோ, உடற்பயிற்களோ, இசை கேட்டலோ எதுவுமே கிடையாது. தனியறையில் தூங்கவேண்டும். மணி அடித்தாற்போல் காலை நான்கு மணிக்கு தியானத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் தியானம். எட்டு மணி நேரம் உறக்கம்.அதி தீவிர கட்டுப்பாடு கொண்ட இந்தப் பயிற்சியை அதிஷா விவரிக்க விவரிக்க பல இடங்களில் சிரிப்பும் சிலிர்ப்பும் ஏற்பட்டது. அவருக்கு அறையில் இரண்டு தவளைகள் உறவுகளாயுள்ளன. பத்தாம் நாளின் நிகழ்வை வாசிக்கும் போது நமக்கும் அந்த தவளைகளுக்கு ஒரு பாய் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது
“பாசமறுத்தல்லவோ பரகதியை காணுவது” என்ற அய்யா வைகுண்டரின் வாசகத்தை அண்ணனின் சில அனுபவங்கள் எனக்குத் தந்தது. நிலையாமை மட்டுமே உலகில் நிலைத்த ஒன்று. அந்த ஒன்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நம்மைப் போட்டுச்சாத்தும் இந்த வாழ்வை ஈசியாக கேண்டில் செய்துவிடலாம். இது அறிவுக்குத் தெரிந்தாலும் மனதுக்குள் ஏற்றி பயிற்சி செய்ய குரு அவசியம். அப்படியொரு குருவாக இந்த விபாசனாவை அண்ணன் பெற்றிருக்கிறார். நூலை வாசித்து முடித்ததும் எப்படியாவது இந்தப் பத்து நாள் முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. காலம் அருளட்டும்
இது மொத்தமும் புத்தரின் ஏரியா என்பதை அண்ணன் முன்னமே சொல்லி விடுகிறார். ஆனால் அதிகம் பரிச்சயப்படாத புத்த சமாச்சாரங்களை அக்கறையுள்ள எளிமையோடு எழுத்தாக்கியுள்ளார்.
மேலும் அண்ணனின் நகைச்சுவை ததும்பும் எழுத்து நடை நம்மை கழுத்தை நிமிர விடாமல் வாசிக்க வைக்கிறது. ஆட்டோ வாசகங்கள் போல சில பன்ச் லைன்களும் நூலில் உண்டு. சாம்பிள்ஸ் சில..
“சில இழப்பு கூட லாபம் தான். சில லாபம் கூட இழப்பு தான்”
“உழைப்புக்கேற்ப சாப்பிடணும்..அல்லது சாப்பிடுவதற்கேற்ப உழைக்கணும்”
“ஏழைகள் உழைக்க காலையில் எழுகிறார்கள். பணக்காரர்கள் இளைக்க காலையில் எழுகிறார்கள்”
அட்டகாசமான நூல்🔥🔥
(சென்னை புக்பேரில் சால்ட் பதிப்பகம் ஸ்டால் நம்பர் 422-ல் நூல் கிடைக்கும்)

