தவளைக்கல் சிறுமி- நூல் விமர்சனம்

செவிக்கு இதமூட்டி, மனதுக்கு அழகூட்டிய கவிதைகள் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள்

பொம்முவிற்கு எழுதியுள்ள வரிகளில் மனம் மையல் கொண்டது.

“அந்தரத்தில் விதைத்த விதை ஆகாசமாய் செழித்ததடி குட்டி என் செல்லம்” என்றெழுதும் மனம் வாய்க்கப் பெற்றிருக்கிறார் கார்த்திக் நேத்தா. கவிஞனாய் வாழ்வது சுலபம்..கவிதைகளால் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அந்த வாழ்வுக்கு கார்த்திக் நேத்தா முயற்சித்துள்ளார்

“நீரின் நினைவு மீனுக்கு இல்லாததால்..
மீனின் நினைவு நீருக்கு இல்லாததால் நீரும் மீனும் நீந்தியபடியே இருக்கின்றன” என்ற இந்தக் கவிதை இருத்தலியல் தத்துவத்தோடு பயணிக்கும் ஒன்று.

“மழையை விடச் சின்னது என்னது என்கிறாள் பொம்மு.
என்னது என்று நானும் கேட்கிறேன்.
மழையை விடச் சின்னது மழைக்குள் இருக்கும் காற்று என்கிறாள்” என்று போகும் இக்கவிதை வாலியின் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வந்தது

எறும்பை விடச் சின்னது எது? என்ற கேள்வி பாடலில் வரும். எல்லோரும் குழப்பத்தில் புருவம் சுருக்கும் கேள்வி இது. ஆனால் வாலி அதற்கு பதில் கொடுத்திருப்பார்

“எறும்பை விடச் சின்னது.. அது தின்னது!” என்று..

மனிதனின் கண்ணீர் எல்லோருக்காகவும் காத்திருக்காது. சிலரை நினைக்கும் போதே கண்ணீர் வரும். சிலரை கண்ட போது பட்டென கொட்டும்.

சிலருக்காக நம் கண்ணீர் காத்திருக்கும். காத்திருப்பின் கண்ணீர் தூய்மையும் தாய்மையும் கொண்டது என்பேன்

அப்படி ஒரு உறவிற்காக காத்திருந்து சிந்தும் கண்ணீர் நெருப்பின் அனலை மனதிற்குள் ஏற்படுத்தும்

இப்படியெல்லாம் எனக்குத் தோன்ற காரணம், இதோ இந்த வரிகள் தான்

“இப்போது என்னிடம் இருப்பதெல்லாம் நீ வந்ததும் அவிழ்வதற்காகக் காத்திருக்கும் கண்ணீர் துளிகள் மட்டும் தான்”

இந்த வரிகள் இரு நாட்களாக தூங்கவிடவில்லை.. நம்மைக் கடந்து போக விடாமல் கடத்திக் கொண்டு போகும் கவிதைகள் சில நூலில் உள்ளன👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *