ஆத்மார்த்தமான உணர்ச்சிக்குவியல்
சீலி என்ற பருவப்பெண்ணை அவளின் தந்தையே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு, அக்குழந்தைகளை எங்கோ வீசிச்சென்றுவிடுகிறார்…மேலும் சீலியின் தங்கை நெட்டிமீதும் அந்தத் தந்தை காமம் குவிக்கிறார். சீலி போன்ற அப்பாவி அல்லாத நெட்டி அவரிடம் இருந்து தப்பிக்கிறாள். சீலியை தன் வயதையொத்த ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கிறார் தந்தை. சீலியை திருமணம் செய்த அந்த வயதானவருக்கும் நெட்டி மீது காமம் ஏற்பட, நெட்டி நாடு கடக்கிறாள். பின் நெட்டியும் சீலியும் கடிதம் வழியே பேசிக்கொள்கிறார்கள். அப்போது தான் தங்கள் தந்தை உண்மையான தந்தை அல்ல என்ற உண்மை இருவருக்கும் தெரிகிறது.
“என் குழந்தைகள் நம் அப்பாவின் குழந்தைகள் அல்ல..நம் அப்பா நம் அப்பாவே அல்ல” என்ற நிஜம் தெரிந்தபின் சீலிக்கு குழந்தைகள் மீது ஏக்கம் பிறக்கிறது. இயற்கை ஆசீர்வதிக்க அக்குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கே நெட்டி பணி செய்யப்போக, முடிவை எட்டும் வரை நாவல் உணர்ச்சிகளால் நம்மை உலுக்கி எடுக்கிறது. இதற்கிடையில் சீலி ஷுக் என்ற பெண்ணால் அடையும் மாற்றங்கள் எல்லாம் அபாரம்..
நிற அரசியல் பற்றியும் கடவுள் பற்றியும் சீலி நெட்டி கடிதங்கள் வழியாக அறிய முடியும். எதற்காக இங்கு வரவைக்கப்பட்டோம் என்ற புரிதல் நம்மை நெருங்கும் நேரத்தில் வாழ்வு முடியும் நேரம் நம்மை நெருங்கி விடுகிறது. இதை ஆல்பர்ட் உணரும் போது, அன்பை பரப்புவதே நம் ஆயுற்பணியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது
இயற்கையோ இறைவனோ அவர்கள் நடத்தும் கால விளையாட்டு முன் நாமெல்லாம் வெறும் காளான்கள் என்ற தரிசனம் கிடைத்தது . மிகச்சிறந்த நாவல் ❤️
ஷஹிதா அக்காவின் அற்புதமான மொழிபெயர்ப்பிற்கு ஸ்பெசல் ஹார்ட்டீன்கள்

