இறந்து போனவர்களின் வாழ்வும் வரலாறும் எவற்றிலிருக்கிறது? ‘வார்த்தைகளில் தான் இருக்கிறது’ என்கிறார் சல்மான் ருஷ்டி.
சல்மான் ருஷ்டியின் படைப்பை காலச்சுவடு பதிப்பகம் தரமாக வெளியிட்டுள்ள இந்த நாவல் வழியாகத்தான் வாசித்தேன். அபாரமான எழுத்து🔥வாசிப்பில் கூடுதல் கவனத்தைக் கோரும் இப்படைப்பை ஆகச்சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் ஆர்.சிவகுமார். ஒரு மனிதன் இறந்தபின் அவன் வெற்றிகள், தோல்விகள் யாவும் வார்த்தைகள் தான். வார்த்தைகள் மட்டும் தான் ஒரு வரலாற்று நாயகனை நிலை நிறுத்துகிறது. ஆக வரலாற்றின் நிஜ நாயகன் வார்த்தைகள் மட்டுமே எனத் துணியலாம்
வரலாற்றில் ஆள்பவர்களின் பவர் சென்டரில் ஆண்களே மேலோங்கி நிற்பது உலக வழக்கம். சல்மான் ருஷ்டியின் புனைவு கலந்த இந்த வரலாற்றில் பம்பா கம்பானா என்ற பெண்ணே அனைத்தையும் தீர்மானிப்பவளாக இருக்கிறாள். தாயை இழந்து ஒரு துறவியின் குகைக்குள் செல்லும் அவள் ஒன்பது ஆண்டுகள் மெளனமாகவே இருக்கிறாள். அதன்பின் அவளுக்கு இயற்கை உலகைப் படைக்கும் சிருஷ்டியை கொடுக்கிறது. ஹுக்கன் புக்கன் என இரண்டு சகோதர்கள் அவளைச் சந்திக்கிறார்கள். பம்பா கம்பானா அவர்களிடம் சாக்குப் பை நிறைய மந்திர விதைகளை கொடுத்து “நீங்கள் இந்த விதைகளை வைத்து ஒரு நகரத்தை உருவாக்க முடியும். உருவாக்கிய நகரத்தை நீங்களே ஆள முடியும்” என்கிறாள். “கால்நடை மேய்க்கும் எங்களுக்கு நாட்டை ஆள முடியுமா?” என்கிறார்கள் ஹுக்கனும் புக்கனும். முடியும் என்கிறாள் அவள்.
அவர்கள் விதைக்கும் விதைகள் ஒரு நகரமாக (விஜயநகரமாக) வளர்கிறது. பிஸ்நகா நகரம் என அதற்குப் பெயரிடுகிறார்கள். அங்கு மனிதர்கள் உருவாகிறார்கள். பின் அந்த நகரத்தின் அரசனாக யார் இருப்பது என்று கேள்வி எழுகிறது. அந்த கேள்வி சண்டையாக வலுப்பெறுவதற்குள் ஹுக்கன் புக்கன் இருவரில் மூத்தவனான ஹுக்கன் அரசன் ஆகிறான். மேலும் பம்பா கம்பானாவை இருவரும் விரும்புகிறார்கள். ஹுக்கனே திருமணம் புரிகிறான். ஆனால் தூய்மைவாதம் என்பதை துறந்த பம்பா கம்பானா அந்நாட்டுக்கு பயணியாக வந்த டொமிங்கோ நூனிஸோடு உறவு கொள்கிறாள். சாகா வரம்பெற்ற அவளின் இளமை அப்படியே இருக்கிறது. அவளுக்குள் இயங்கும் சிந்தனையும் செயலும் விநோதமானவை. பின் நடப்பதை முன் கணிக்கும் திறன் கொண்ட அவள் தன் வாழ்வு மாறா இளமையோடு 250 ஆண்டுகள் நீடிக்கப் போவதை உணர்கிறாள். அவளின் பேத்திக்குப் பேத்தி பிறந்து, அப்பேத்திக்கு பேத்தி பிறந்தும் அதே இளமையோடு இருக்கிறாள். அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் வயதாகி தோல் சுருங்கி மரணிக்கும் போதும் பம்பா கம்பானா அப்படியே இருக்கிறாள்.
அரசியலில் வீழ்வும் வாழ்வும் கொண்ட அவளின் பயணத்தை நாவல் தத்துவத்தின் வழிநின்று சொல்கிறது. வாசிக்க வாசிக்க வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது நாவல்
உணர்ச்சி வசப்படாத எழுத்து. ஆனால் நம்மை மேலான உணர்ச்சிக் குவியலுக்குள் தள்ளும் வலிமை கொண்டது. பேரரசில் நடக்கும் எல்லா மாற்றங்களையும் பெண் கதாப்பாத்திரங்களை வைத்து தான் நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த நாவலில், ‘ஆள்வதும் பெண்ணாலே’ என்பதை கட்டமைத்துள்ளார் சல்மான் ருஷ்டி.
சாகாவரம் என்பது எல்லோரும் விரும்பும் ஒன்று. ஆனால் எல்லா வரங்களுமே சாபங்களாகும் தருணம் உண்டு.
அதீத பொறுமையோடும் கவனத்தோடும் வாசித்தால் பேரனுபவம் கிட்டும்

