“வாழ்வை யாரும் கத்துத் தர முடியாது .ஆனால் எல்லாரிடமிருந்தும் கத்துக்க முடியும்” என்ற சரடு தான் நாவலின் மையம்
சாங்கிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்தொழுகும் அந்தணக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சித்தார்த்தன், சமணம் ஏற்கப்போகிறேன் என தந்தையிடம் சொல்கிறான். தந்தை மறுக்க..அவன் அனுமதி கேட்கவில்லை தகவல் சொல்கிறேன் என்ற தொனியில் பேசிவிட்டு பின் தந்தையின் கண் அசைவுக்காக காத்திருக்கிறான். தந்தை செல் மகனே என விடைகொடுக்க, தன் நண்பன் கோவிந்தனுடன் சென்று சமண மதத்தை ஏற்கிறான். அவனுக்கு சமணம் முழுமையை தராமல் போகிறது. எல்லாத் தத்துவங்களையும் கற்றபின்னும் அவனுக்கு மனம் நிறைவெய்தவில்லை. நண்பனோடு நதிகடந்து புத்தரைச் சந்திக்கச் செல்கிறான் சித்தார்த்தன். புத்தரின் போதனைகளை புன்னகையோடு மறுக்கிறான் சித்தார்த்தன். நண்பன் கோவிந்தன் அங்கே புத்தச்சீடனாக மாறுகிறான். சித்தார்த்தன் நதி கடக்க வருகிறார். மக்களை நதி கடத்திவிடும் ஒரு படகோட்டி சித்தார்த்தனுக்கு நண்பனாகிறான். சித்தார்த்தனின் தத்துவப்பேச்சு தோணிக்காரனை ஈர்க்கிறது. இந்த நதி நம்மிடம் பேசும் என்ற தோணிக்காரனின் வாழ்க்கைப் பார்வை சித்தார்த்தனுக்குப் பிடிக்கிறது..
சித்தார்த்தன் ஒரு நகருக்குள் செல்கிறான். கமலா என்ற ஒரு வேசியிடம் சென்று, “நான் உன்னிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்கிறான். அவளிடம் ஒரு முத்தம் பெறுவதற்காக ஒரு பாடல் இயற்றுகிறான். அவள் அந்தணச் சமணனைக் கண்டு வியக்கவில்லை என்றாலும் தன்னை முழுமையாய் இழுக்கும் திறன் இவனிடம் உண்டு என்று உணர்கிறாள். கூடுதல் இன்பத்தை இருவரும் பரிமாறி பசியாறுகிறார்கள். காமசாமி என்ற வணிகடம் கமலா சித்தார்த்தனை வேலைக்குச் சேர்த்து விடுகிறாள்
சித்தார்த்தன் உடல் மூலம் தன் ஆன்மாவைத் தொடுகிறான் என்பதை உணர்ந்த கமலா சித்தார்த்தன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைக்கிறாள். சித்தார்த்தனுக்கு தொடர் அனுபவித்தலில் ஒரு சலிப்பு ஏற்பட கமலாவை விட்டுச் செல்கிறான். வயதாகி விட்டது. நதி கடக்க தோணிக்காரனிடம் வந்து அவன் போல இவனும் தோணிக்காரனாக மாறுகிறான். சில காலம் செல்ல..புத்தரின் பாதம் காண கமலா சித்தார்த்தனால் தனக்குப் பிறந்த தன் மகனை அழைத்துக்கொண்டு வருகிறாள். நதி கடக்கும் வேளையில் நாகம் தீண்டி சித்தார்த்தனின் பாதத்திலே இறக்கிறாள். அந்த நேரத்தில் புத்தரின் உயிரும் அவரின் கூட்டை விட்டுச் செல்கிறது. மகனைச் சித்தார்த்தன் தன் கட்டுக்குள் வைக்க நினைக்கிறான். மகன் ஓடோடி விடுகிறான். யார் மீது எமோஷ்னல் அட்டாச்மெண்ட் இல்லாத சித்தார்த்தனுக்கு மகன் மீது மட்டும் பற்று புற்றாக வளர்கிறது. அப்போது தோணிக்காரன் சித்தார்த்தனுக்கு பல விசயங்களை உணர்த்துகிறான். அதில் முக்கியமான ஒன்று உன் வாழ்வு உன் தந்தையின் தீர்மானத்தின் படியில்லை. பின் எப்படி உன் மகன் வாழ்வு உன் தீர்மானப்படி நடக்கும்” எனச் சொல்ல, சித்தார்த்தன் சிலிர்க்கிறான். முழுமை அடைந்த தோணிக்காரன் வாழ்வில் இருந்து விடைபெறுகிறான்.
அதன் பின் வயதான காலத்தில் புத்தச் சீடனான தன் நண்பன் சித்தார்த்தனைத் தேடி வருகிறான்.. இருவருக்கும் சில உரையாடல்கள் நடக்கிறது. அந்த உரையாடலின் முடிவில், “ஞானம் என்பது கற்றுக்கொடுக்க கூடியதல்ல…நாமாகவே கற்றுத் தெளிவது” என்பதாக நாவல் நிறைவடைகிறது
நாவலின் பெரும் பகுதிகள் உரையாடல்களின் வழியே கடப்பதால் வாசிப்பின்பம் அதிகமாகிறது. முழு நூலையும் உடனே உள்வாங்கிக்கொள்ள முடியும்..ஒரு கல்லுக்கு இருக்கும் மதிப்பு தான் இங்கு எல்லோருக்கும் என்பதையும், உயர்வு தாழ்ச்சி என்ற வரையறைக்குள் மனித அறிவு நீந்திச் சென்றால் அந்த அறிவு நதியைச் சென்றடையாது. குட்டையில் தான் சென்று சேரும் என்பதையும் உணர முடிந்தது.
வாழ்வின் தொடக்கமும் முடிவும் வார்த்தைகளால் அல்ல..செயல்களால் தான் நிரப்பப்பட வேண்டும். அந்தச் செயல்களில் பெருகி நிற்பது அட்வைஸ், ஞானம், முக்தி, சாதனை இவையெல்லாம் இருக்கக்கூடாது. செயல்களின் வழியே அன்பு மட்டும் தான் பிரதிபலிக்க வேண்டும்❤️❤️
நூலைப் பரிந்துரைத்த திரை எழுத்தாள தாஸ் சாருக்கு அன்பும் நன்றியும்🙏❤️🥰

