காதல் ஆத்திச்சூடி

ஒரு கலைஞன் தனக்குள் இருக்கும் (இருந்தால்) குழந்தைமையை ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது என்பேன். கலையில் மேம்படவும், படைப்பில் இதயத்தை இலகுவாக்கும் வித்தையைக் காட்டவும் குழந்தைமை எண்ணங்கள் நமக்கு உதவி செய்யும். காதலால் தான் குழந்தைமை எண்ணத்துக்குள் நீந்த வைக்க முடியும்.

தபூ சங்கரின் கவிதைகள் மீது பெரும் காதலெடுத்து திரிந்த காலங்கள் உண்டு.

அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ, இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது, வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய், கொஞ்சல் வழிக்கல்வி, என அவரது நிறைய நூல்களோடு நூலளவும் விலகாத பந்தம் உண்டு. வாசிப்பிற்காக அடுக்கி வைத்திருந்த நூல்களின் வரிசையில் இந்த நூல் இடம் பிடித்திருந்தது. டக்கென மனம் காதலித்த காலத்திற்கும், குழந்தைமை சிந்தனைக்குள்ளும் போனது.

அ, ஆ என உயிரெழுத்துக்களில் ஆயுத எழுத்தான ஃ-வைத் தவிர்த்து எல்லா எழுத்துக்களிலும் காதல் குறிப்பை எழுதி வைத்துள்ளார். ஆயுத எழுத்து ஏன் இல்லை என்றால் முன்னுரையிலே பதில் இருக்கிறது. “காதலுக்கு ஆயுதம் தேவை இல்லை அல்லவா!”

“கவலையே படாமல் இதயத்தைத் திருடுங்கள். எந்தச் சட்டத்தாலும் இந்தத் திருட்டைத் தண்டிக்க முடியாது” மிகவும் சாதாரண வார்த்தைகளாகத் தெரியும் இப்படியான கவிதைகளை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. பேசும் மொழியை கவிதை மொழி ஆக்கியவர் தபூ சங்கர். நா.முத்துக்குமார் ஒருமுறை கல்லூரிகளுக்கு சிறப்பு தமிழ் வகுப்பு எடுக்கச் சென்ற போது, எல்லா மாணவ மாணவிகளும் தபூ சங்கரின் கவிதை நூல்கள் தான் விருப்பமானவை” என்றார்களாம். 2010 கால கட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் தபூ சங்கர் கலக்கிக் கொண்டிருந்தார். காதல் படிகளைத் தாண்டி அவர் வேறு படியேறவில்லை. அது ஏனோ??

பெரும் களைப்பாக உணரும் போது சற்று இளைப்பாற வேண்டும். அதற்கு மெல்லிய புன்னகையோடு நேரத்தை கடக்க வைக்க தபூ சங்கர் கவிதைகள் உதவும்.

இந்த நூலில் இப்படியொரு கவிதை,

“ஒரு துளியேனும் காதல் இல்லாமல் எந்த உயிரும் ஜனிப்பதில்லை. ஒரு கணமேனும் காதல் கொள்ளாமல் எந்த உயிரும் மரிப்பதில்லை.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *