ருத்ர கணிகை

ஒன்றாம் வகுப்பை கூட எட்டிப்பார்க்காத டேனியல் அவர்கள் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல் இது. முதல் நாவலான மூதின் முல்லை பெரிதும் ஈர்த்த நாவல். இரு நாவல்களிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை என்பது டேனியல் அவர்களின் கல்வி மரியாதைக்குச் சாட்சி.

விரும்பிய ஒருவனை திருமணம் செய்ய வேண்டும் என்று செஞ்சியில் இருந்து சென்னைக்கு வருகிறாள் சுமதி. அப்பா ஏற்பாடு செய்த திருமணம் அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அப்பாவிடம் சொல்லாமலே அவளின் சென்னை விஜயம் நிகழ்கிறது. சென்னை அவளை பாலியல் அத்துமீறலோடு வரவேற்கிறது. அந்தக் கொடுமைக்குள் அவளை சிக்கவிடாமல் காப்பாற்றுகிறார்கள் செக்ஸ் வொர்க்கர்களான சாந்தியும் செல்வியும். அதன்பின் சுமதி தன் காதலனை அடைந்தாளா? என்பதையும், சாந்தி செல்வியைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையையும் ஒரு விறுவிறு திரைக்கதை போல எழுதியுள்ளார் டேனியல். அவரின் முதல் நாவலில் நாவலுக்குள் திரைக்கதை இருந்தது. இதில் திரைக்கதைக்குள் நாவல் அமைந்துள்ளது.

நூலின் மையக் கதாப்பாத்திரங்கள் அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் நூல் காலில் சக்கரம் கட்டி ஓடவில்லை. ராக்கெட் வைத்து பறக்கிறது. ஒரே மூச்சில் வாசித்துவிடும் அளவிற்கு வேகம் வேகம் வேகம். சினிமாவை எழுதுவதற்கும் சினிமாவில் எழுதுவதற்கும் சின்ன வேறுபாடு உண்டு. சினிமாவில் எழுதுவற்கான திறனை கைவரப்பெற்றுள்ளார் நூலாசிரியர்.

நாவலில் ஒருபெண் செக்ஸ் வொர்க் வாழ்விற்குள் ஏன் வந்தாள்? என்பதற்கு செல்வி சொல்லும் காரணமும், சாந்தி சந்தித்த சூழலும் நிச்சயமாக புத்தம் புதிய சிந்தனை.

மூதின் முல்லை நாவலின் நீளமும் ஆழமும் இதில் இல்லை, இதில் உள்ள வேகமும் ஐடியாக்களும் மூதின் முல்லையில் இல்லை.

ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள நாவல்.

நாவலை வாங்குவதற்கு தொடர்பு எண்
87545 07070

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *