இதுவரை சு.வேணுகோபால் கதைகளை வாசித்ததே இல்லை. இனி வாசித்தே ஆக வேண்டும் என்ற பெரு வேட்கையைத் தந்தது இந்த நூல். மனிதனின் அக/புற பயணத்தின் வேர்களை மிக எதார்த்தமாக பதிவு செய்கிறார்.
‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்றொரு கதை. ஒரு செக்ஸ் வொர்க்கரின் கதை அது. சொதசொதவென்று துர் நாற்றத்தோடு ஒருவன் அவளை அழைப்பான். அந்தக் கஸ்டமரை வேண்டாம் என்பாள். அடுத்து அழகாக ஒரு இளைஞனுக்குச் சம்மதிப்பாள். “ஆனால் ஒரு ஆள் மட்டும் தான். வீட்டுக்குப்போனதும் மூன்றுபேர் வந்திடக்கூடாது” என்று அவனிடம் எச்சரிக்கையோடு தன் பாதுகாப்பு கருதி கறார் காட்டுவாள். அவனும் சரியென்பான். ஆனால் வீட்டில் மூன்று பேர் குடித்துவிட்டு அவளிடம் மோதுவார்கள். அப்போது அவள் புலம்பும் வார்த்தை ஒன்று உண்டு. வலியின் அடர்த்தியை இப்படிச் சொல்ல பெரிய உணர்வெழுச்சி வேண்டும். அவள் சொல்கிறாள், “மறுபடி ஒவ்வொருவனும் மேலே படுக்கிறபோது யோனி உடலில் வேறுவேறு இடங்களில் இருக்கக்கூடாதா என்றிருந்தது!” மனதை வலிபடுத்திய வார்த்தைகள் இவை. மேலும் அழைப்பு என்றொரு கதை. கணவன் மனைவி மகனோடு ஒரு குடும்பம். தன் சொந்த வீட்டில் வாழ்கிறார்கள். அந்த வீட்டின் மாடி போர்ஷனில் ஒரு தம்பதி குடியிருப்பர். அவர்களுக்குள் எப்போதும் சண்டை நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சண்டை முடியும் போதெல்லாம் அந்தப் பெண் மிகவும் துயருற்று அழுவாள். வீட்டு ஓனர் ஒரு கட்டத்தில் விசாரிக்கலாம் எனக்கிளம்புவார். அப்போது அவளின் பின்கதையில் ஒரு அசாத்தியமான திருப்பத்தை வைத்திருப்பார் வேணுகோபால். மேலும் அக்கதையில் ஒரு தாய் நாயும் அதன் குட்டிகளும் குறியீடு போல வரும். அவசர முடிவிற்கு ஆழம் என்பதே இல்லை..அந்த முடிவின் ஆயுள் மிகவும் குறைவு என்பதை அக்கதை உணர்த்தும். அவதாரம் என்ற தலைப்பு கொண்ட முதல் கதை பிரமாதமான ஒன்று. மனைவியை விவகாரத்துச் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வெறுப்பின் உச்சத்தை அடைந்து தலை தீபாவளிக்காக மாமியார் வீட்டிற்குச் செல்கிறான் கணவன். வீடு சேர்வதற்குள் அவன் மனதில் நிகழும் மாற்றத்தை எந்த வலிந்து திணித்தலும் இல்லாமல் கதையாக்கியுள்ளார். அற்புதம்.
மேலும் 80 பக்கங்களுக்கு மேல் சு. வேணுகோபால் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இலக்கிய வாசகர்கள் வாசித்தே ஆகவேண்டிய நேர்காணல். எழுத்து மீதும் இலக்கியம் மீதும் சு.வேணுகோபால் கொண்டுள்ள பிடிமானம் மிகவும் போற்றக்கூடியது.
இந்த நூலை தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளது. த.கண்ணன், வெ.சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா ஆகியோர் இணைந்து நேர்காணல் செய்துள்ளனர். கூர்மையான கேள்விகள், ஆழமான பார்வை என நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளனர். வாழ்த்துகள்

