சிவா முத்தொகுதியின் நிறைவு நூல் இது
திபேத்தியனான சிவன் சாதாரண மனிதராக சூர்வம்சிகள் வாழும் தேசத்திற்குள் வந்து, நீலகண்டரான அவர் சந்திரவம்சிகளை எதிர்த்து பின் அணைத்து, அதன்பின் சூர்யவம்சிகளின் பெருஞ்சொத்தான சோமரஸத்தை காக்க நாகர்களோடு போரிடத் துவங்குகிறார். அந்தப் போரின் சமயத்தில் இதுவரை யாருக்காக போரிட்டமோ அவர்கள் பக்கமே பிழை இருக்கிறது என்பதை கண்டறிகிறார். வேலி பயிரை மேய்ந்த கதை. அதன்பின் சிவன் தன் ஆட்கள் பக்கம் நிற்காமல் அறம் பக்கம் நிற்கிறார். அறத்திற்கு அனைவரையும் ஆற்றுப்படுத்த முனைகிறார். போரின் மூலமே அது சாத்தியம் எனும் போது பெரும் போருக்கான வியூகம் வகுக்கப்படுகிறது. இந்த நிறைவு நூல் முழுதும் போர்க்களமும், உணர்ச்சிக்களமும் தான்.
எல்லா முன் முடிவுகளையும் வாசகனை யோசிக்க வைத்துவிட்டு அதன்பின் வேறொன்றை ட்விஸ்டாக வைத்து அசத்துகிறார் நூலாசிரியர் அமீஷ். இந்த நூலை ஆகச்சிறப்பாக தமிழ்ப்படுத்தியுள்ளார் பவித்ரா ஸ்ரீனிவாசன். நேரடி தமிழ்நாவல் வாசித்த உணர்வையே தருகிறது! சூப்பர் சூப்பர்
நாவலில் சாதாரண மனிதர்களாக சிவன், பார்வதி, விநாயகர், முருகர் ஆகியோர் படைக்கப்பட்டிருப்பதால் கதையின் போக்கை ருசித்து ரசிக்க முடிகிறது
“எப்படியும் கடவுள் தான் ஜெயிப்பாங்க” என்று நாம் சாதாரணமாக நினைக்குமிடம் ஒன்றில் தான் பார்வதி தேவி போரில் வீரமரணம் அடைகிறாள். மனதை உலுக்கிப் போட்டது அந்தப் போர்க்காட்சி. சிவன் பார்வதி பிள்ளையார் முருகர் ஆகியோர் ஆன்மிகம் தாண்டியும் ஒரு குடும்பமாக நமக்குள் கலந்தவர்கள். நம் எமோஷ்னலில் இணைந்தவர்கள். ஆகையால் கடவுள் அம்சத்தைத் தாண்டி அவர்கள் வீழும்போது வேதனையும், மீளும்போது மகிழ்வும் வருகிறது நமக்கு
யாரை நாம் நமக்கானவர்கள் என்றிருந்ததோ அவர்களை நமக்கு எதிர் திசையில் பார்க்கையில் பெரும் வலி வரும். அந்த வலியை நாவலில் சிவன் பெறுவார்.
கடவுளாக இருந்தாலும் கஷ்டம் உண்டு. கஷ்டத்தை இஷ்டப்பட்டு கடக்கும் போது நஷ்டமில்லா வாழ்வு அமையும். இந்நூலில் நிறைய கேரக்டர்களுக்கு அப்படி அமைகிறது
உலக இலக்கியத்தின் ஒப்பற்ற நூல் என புகழ வழியில்லை என்றாலும், எளிய வாசகனையும் இயல்பாக ஈர்த்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நாவல் என்பதில் சந்தேகமேயில்லை

