“வாழ்கன்னு சொல்றவன் வாழத்தான் செய்வான்” என்ற வசனத்தை இமையம் எழுதியிருக்கிறார் இந்த நாவலில். வாழ்க எனச் சொல்பவனின் மனதில் உணர்ச்சியும் உண்மையும் இருந்தால் தான் அதை வாழ்த்தாக எடுத்துக்கொள்ள முடியும். கொடுக்குற ஐநூறுக்காக வாழ்கன்னு சொல்றதையெல்லாம் வாழ்த்துக்கணக்குல சேர்க்க முடியாது
ஜெயலலிதாவின் மாநாட்டுக்காக ஆள் சேர்க்கிறான் லோக்கல் பொலிட்டிகல் பார்ட்டியான வெங்கடேசப்பெருமாள். கூட்டம் கூட்டி கணக்குக் காட்டி காசு பார்க்கும் ஆசாமி அவன். ஆண்டாள் என்ற பெண் தன் பேத்திக்கு மருத்துவம் செய்ய காசு தேவை என்பதற்காக கட்சிக்கூட்டத்துக்குச் செல்ல சம்மதிக்கிறாள். ஊர் பெண்களை எல்லாம் பேசிப்பேசி பணம் கொடுத்து ஆள் திரட்டுகிறான் வெங்கடேசப்பெருமாள்.
அந்த ஊர் பெண்களில் கணிசமானோர் 15 பேர் செல்லக்கூடிய வேன்களில் 30 பேருக்கும் மேல் நெருக்கியடித்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பயணம், “ஒருநாள் கூத்து..கூத்துப் பார்க்க காசு” என்பதாகவே படுகிறது. இப்படியாக அவர்கள் செல்லும் கூட்டத்தில் நடக்கும் அசம்பாவிதங்களை நாவலாக்கியுள்ளார் இமையம். இந்த நாவலில் உள்ள அனுபவத்தை ஒன்று நாம் பெற்றிருப்போம். அல்லது யார் சொல்லியாவது கற்றிருப்போம். அதனால் நாவல் ஈசியாக நமக்குள் கனெக்ட் ஆகிறது. இமையம் பக்கா திமுக என்றாலும் சில இடங்களில் எல்லாக் கட்சியையும் விமர்சித்துள்ளார். எங்கும் ஜெயலலிதா, கருணாநிதியின் பெயரோ, அதிமுக, திமுக பெயரோ நாவலில் வரவில்லை என்றாலும் நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது
அயோக்கியனின் கடைசி புகழிடம் அரசியல் என்பார்கள். அதை நிஜமென உணரும் காலம் அப்போதுமிருந்தது இப்போதுமிருக்கிறது. நாவலை வாசிக்கையிலும் இதை உணர முடிகிறது.
நாவல் மொத்தமும் உரையாடலாகவே கடந்து போவது சின்ன நெருடல்
ஜெயலலிதாவை ஆங்காங்கே லேசாக கதாப்பாத்திரங்கள் பேசுகிற பாங்கில் விளாசியுள்ளார் இமையம். (எதிர்பாசம்) “எல்லாக்கட்சிகளும் அப்படித்தான்” என்று பொதுமையும் அவரிடம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
தங்கள் தலைவியின் கடைக்கண் அருளைப் பெறுவதற்காகவும், தன் மாவட்டச் செயலாளரிடம் போதுமான பொருளைப் பெறுவதற்காகவும் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் கட்சிக்காரன் மாலையில் வரும் தலைவிக்காக காலையிலே கூட்டத்தைச் சேர்க்கிறான். வாட்டியெடுக்கும் வெயிலில் ஐநூறு ரூபாய்க்காகவும் புடவைக்காகவும் வந்த பெண்கள் மூத்திரக்கடுப்பில் வாடும் காட்சியும் இறுதியில் நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடக்கும் கோர காட்சியும் கரூர் துயரத்தை நினைவூட்டி மனதிலே வலியேற்றியது
வாழ்க வாழ்க எனும் கோசத்தைச் சொல்கிறவனுக்கு ஒருக்காலமும் வாழ்தல் என்பது நிகழ்வதேயில்லை
நாவல் முடியும் போது இதை உணரமுடியும்

