ஆடு ஜீவிதம்- நூல் விமர்சனம்

ஆடு ஜீவிதம்

தேவையின் பொருட்டு வாழ்வதற்கும், ஆசையின் பொருட்டு வாழ்வதற்கும் வேறுபாடு உண்டு. இந்த ஆடு ஜீவதத்தில் நஜீபின் வாழ்வு நியாயமான ஆசையில் துவங்கி உறுதியான தேவையில் முடிகிறது. அரபு நாட்டு பாலைவனத்திற்கு வாழச்சென்று வாழ்வைத் தொலைத்தவர்களின் கதைகள் நிறைய இருக்கலாம். இந்த நஜீப் கதை நம் உயிரின் வேர் வரை பாயக்கூடிய ஆற்றல் பெற்றது.

திருமணம் முடித்த உடன் பொருள்வழி பிரிதல் என்ற முறையில் நஜீப் சவூதிக்கு வருகிறார். அவரோடு ஹக்கீம் என்ற ஒரு சிறுவனும் வருகிறான். விமான நிலையத்திலிருந்தே துவங்குகிறது அவர்களின் துயரம். ‘ஹாய் ஹலோ’ என்று ரிசீவ் செய்து பணியமர்த்தும் மனிதரும் சூழலும் இருவருக்கும் வாய்க்கவில்லை. ஒரு அழுக்கடைந்த காரில் ஒரு அழுக்கடைந்த அர்பாப் வருகிறார். இருவரையும் காருக்குள் இழுத்துப்போட்டு பாலைவனத்திற்கு வண்டியை விடுகிறார். ஹக்கீமை ஒரு ஆட்டு மஸாராவிலும் (ஆட்டு தொழுவம்) நஜீப்-ஐ ஒரு மஸாராவிலும் அடைக்கிறார். நஜீப் அடைக்கப்பட்ட மந்தையில் ஏற்கெனவே ஒரு அடிமை இருக்கிறான். துயரம் ஏறி ஏறி மரத்துப் போன மனிதனாக மாறியிருக்கும் அவன் நஜீப் சென்ற சிறிது நாட்களில் தப்பித்து விடுகிறான். அவனது தப்பித்தல் சம்பவம். நஜீப்பிற்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. ஆனால் அந்த நம்பிக்கையை மண்ணில் புதைக்கப்பட்ட தப்பிச்சென்ற அந்த மனிதனின் சடலம் தகர்க்கிறது. அதன்பின் ஆடுகளினூடாக நஜீப் வாழ்வு நீள்கிறது. குளிக்கத்தடை, மலம் கழித்தால் சுத்தப்படுத்த. தண்ணீர் கிடையாது, கிஞ்சித்தும் சுகாதாரம் கிடையாது, உருப்படியான ஆகாரம் கிடையாது, தான் என்ன தோற்றத்தில் இருக்கிறேன் என்று பார்ப்பதற்கு கண்ணாடியும் கிடையாது. 1991 கால கட்டத்தில் நடந்த நஜீப்பின் இந்த வாழ்க்கைச் சம்பவம் முழுக்க முழுக்க துன்பயியல் நிறைந்தது. பேச்சு, காதல், வன்மம், கோபம், இயலாமை, காமம் முதற்கொண்டு எல்லாமே நஜீபிற்கு ஆடுகளோடு தான். இழப்பதற்கு உயிர் மட்டும் தான் மிச்சம் என்றால் மனிதன் என்ன இருக்கிறதோ அதனோடு வாழத்தலைப்பட்டு விடுவான். இது இயற்கை நியதி.

இருந்தும் ஊரில் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வந்தவன் என்பதால் நஜிபிற்கு தனக்கு குழந்தை பிறந்திருக்குமே என்று தோன்றும் போதெல்லாம் வலி நிறைந்து தவிக்கிறான். அந்த வலியைச் சாந்தப்படுத்த அவனுக்கு ஒரு ஆடு மகனாக தேவைப்படுகிறது

அல்லாஹ் மிக்க கருணையுடைவன் என்ற ஒற்றை நம்பிக்கை நஜீப்-ஐ அந்த ஆடுகளோடும், அடி, உதை, எச்சில் துப்பல் போன்ற அர்பாபின் கொடுமைகளோடும் வாழ வைக்கிறது. எப்பதத்திற்கும் எதிர்ப்பதம் உண்டு என்பதற்கேற்ப அந்த பாலையிலிருந்து தப்பிக்க நஜீபிற்கும் ஹக்கீமிற்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை இறைத்தூதர் போல வரும் இப்ராஹிம் என்பவர் தருகிறார். அர்பாப் திருமணத்திற்காக சென்ற நாள் ஒன்றில் மூவரும் தப்பிக்கிறார்கள். அந்தக் கொடும் பயணம் ஒரு ஆன்மிக அனுபவம் நிறைந்தவை.

தப்பத்தலின் பொருட்டு பாலையில் இரவும் பகலுமாக அவர்கள் படும் அல்லல்களும், தவிர்க்க முடியாத இழப்பும் உணர்ச்சிமிக்கவை. நாவல் முடிவை எட்டும் போது மனது பரபரப்பில் உறைந்து போய்விடுகிறது. பென்யாமினின் அபாரமான எழுத்தை மிக அற்புதமாக தமிழ்ப்படுத்தியுள்ளார் விலாசினி. மொழிபெயர்ப்பு நாவல் என்ற தோற்றம் சுத்தமாக எழவேயில்லை.

குறையாத இறை நம்பிக்கையும், வாழ வேண்டும் என்ற முழு நம்பிக்கையும் நம்மை எந்த இக்கட்டிலும் காப்பாற்றும் என்பதை இந்த ஆடு ஜீவிதம் நஜிப்-ன் வாழ்வின் வழி நின்று சொல்லித்தருகிறது

தவறவிடக்கூடாத நாவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *