மறைக்கப்படுற அன்பு கூட என்றாவது ஒருநாள் வெளில ஓடியாந்துடும். ஏன்னா மறைக்கப்படுற எல்லாம் வெளிவந்தே தீரும் என்பது நியதி/ விதி
ஆனா மறுக்கப்படுற அன்பு ரொம்ப வலியைக் கொடுக்கும். இந்தக்கதையில வர்ற சுயம்பு மேகலையா மாறிட்டு வர்றதை ஜீரணிக்க முடியாத அவன் குடும்பம் சூடு வைப்பதோடு அன்புக்கும் தற்காலிகமா என்ட் போடுது. அது தற்காலிகம் தான் என்பது சுயம்புக்கு தெரியிறதுக்குள்ள வருசம் 10 ஓடிடுது. அதுக்குள்ள தலைநகர் டெல்லிக்கு ஓடிய சுயம்பு முழுக்க முழுக்க மேகலையா மாறிடுறா(ன்)
அதன்பின் க்ளைமாக்ஸ்ல அவன் சொந்த ஊருக்கு ராஜா மாதிரி. இல்ல ராஜாராணி மாதிரி வர்றான்.
அங்கு அவனுக்காக அவன் குடும்பம் எப்படியெல்லாம் ஏங்கி நின்றது என்பதை அறியும் போது இந்தக் கதை வோறோர் பரிணாமத்தை அடையுது. பேருழைப்போடு பேரார்வமும் பேராற்றலும் கொண்டு இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் சமுத்திரம். டெல்லியில் திருநங்கைகளுக்கு.. (இந்த நாவல் எழுதிய காலத்தில் திருநங்கை என்ற வார்த்தை புழக்கத்திற்கு வராததால் நாவல் எங்கும் அலிகள் என்றே கூறப்பட்டுள்ளது)
ஆதரவாக இந்திரா காந்தி இருந்தார் என்ற வரலாற்றையும், இந்திரா காந்தி இறந்தபோது நடந்த கலவரத்தையும் கதையினூடே அழகாக பதிவு செய்திருக்கிறார்.
டேவிட் என்ற கேரக்டர் மூலமாக சுயம்பு ஏன் மேகலையாக மாறுகிறான்…அவன் அப்படித்தான் மாறுவான் என்ற காரணங்களை அறிவியல் தன்மையோடு சுயம்பு என்ற மேகலையின் குடும்பத்திற்கு சொல்வது மூலமாக நமக்கும் விளங்க வைத்திருக்கும் திறம் உணர்ச்சித் தரம்👌
சுயம்வுவான மேகலை தன் அக்கா மரகதம் மீது கொண்டுள்ள பேரன்பும், டேவிட் மீது கொண்டுள்ள பெருங்காதலும் உணர்ச்சிக் கவிதை. இந்தக்கதையில் நான்கு சொட்டு கண்ணீரை சுயம்பு என்ற மேகலை வரவைத்தார் என்றால் பத்து சொட்டு கண்ணீரை மரகதம் வர வைத்தாள்.
தன் சேலையை ஆசையாக் கட்டிய தம்பியை அடித்துவிட்டாலும். அந்தத் தங்கையாகும் தம்பிமீது அவள் கொண்டுள்ள ரத்தப்பாசம் ரத்தத்தை சுண்ட வைக்கும்.
அப்புறம் நாவலில் திருநங்கையாய் மாறியவனை வீடு அடித்தது, ஊர் சிரித்தது, காவல்துறை குதறியது, சமூகம் சீறியது..அய்யோ அவன் பாவம் என்று வெறும் லாலா பாடாமல் …முடிவில் அத்திருநங்கை ஹீரோவை ஒரு சமூகம் மதிக்கும் ஜீவனாக காட்டியது தான் நாவலின் அடிப்பொலியான சம்பவம்👌👌
இந்நாவல் எழுதிய காலத்தில் இருந்த நெருக்கடிகள் இப்போது திருநங்கைகளுக்கு இல்லை என்றாலும் இன்றும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட வில்லை என்பதும் நிஜம்.
சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த பையன் (இப்ப அவன் பையனாக இல்ல) கூட போட்டோ எடுத்து அவனின் அவதாரம் பற்றி எழுதியதற்கு எழுதிய என் கையை திருகாமல் எழுதக்காரணமாய் இருந்த அவன் கையை திருகியது அவனது சொந்தம். ஆனால் இப்போது திருகியவர்களை திரும்பிப் பார்க்க வைத்து விட்டான்(ள்) அந்தப் பையன். ❤️
எனக்கு நம்பிக்கை இருக்கிறது நாவலில் வந்த சுயம்பு என்ற மணிமேகலை போல அவனும் (ளும்) ஒருநாள் மாஸ் காட்டுவான்(ள்)
வழக்கம் போல் நூல் தந்தமைக்கு நன்றி தினேஷ் ராம்

