நீர் மேல் எழுத்துக்கள் (ஹைக்கூ)

ஷாட்களின் வழி கவிதைகளை காட்சிகளாக்கியவர் இயக்குநர் சரண் சார். தீவிர விஜய் ரசிகனான அடியேன் உள்பட பலரை காதல் மன்னன் படம் மூலம் அஜித்-ஐ கொண்டாட வைத்தவர் அவர். அமர்க்களத்தில் வரும் அஜித்-ஐ யாருக்குத் தான் பிடிக்காது. சரண் சாரின் படங்களின் பாடல்களுக்கு அடியேன் பெரிய ரசிகன்! ஆகப்பெரிய ரசிப்புத்தன்மை நிறைந்த இயக்குநர்களால் தான் இசைஞர்/கவிஞர் இருவரிடமிருந்தும் நல்ல பாடல்களை வாங்க முடியும். அதைச் செய்து காட்டியவர் சரண் சார். காதல்மன்னன், ஜெமினி, அமர்க்களம், ஜே.ஜே, வசூல்ராஜா எம்.பி.எஸ் என அவரது கமர்சியல் படங்களிலும் எங்கோ ஒரு மூலையில் கவித்துவம் கொட்டிக்கிடக்கும். இயல்பிலே அவருக்கு கவிதை மனம். உண்டு! அதைத்தாமதமாக உணர்ந்து எழுத்தாக்கியுள்ளார். இவற்றுக்கு நீரூற்றியவர் இயக்குநர் லிங்குசாமி அவர்கள். லிங்குசாமி சாரைப்பற்றி ராஜுமுருகன் ஒருமுறை, “தயாரிப்பு பஞ்சாயத்துக்கள், இயக்குநருக்கான பிரஷர் நிறைந்த வேலை, டிஸ்டிப்யூசன் பணிகள் என கண்முன் கடும்சுமை இருந்தாலும், அச்சூழலிலும் ஒரு நல்ல கவிதையை வாசித்துவிட்டால் எழுதிவரை அழைத்துப்பாராட்டுவார்” என்று எழுதியிருந்தார். அதை லிங்குசாமி சாரிடம் அடியேன் நேரிலே கண்டேன். இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் நண்பர் பிரபு ஜெயராம் என்னை சரண் சாரையும் லிங்குசாமி சாரையும் ஒருசேர சந்திக்க அழைத்துச்சென்றார்.

முத்தாக மூன்று மணிநேரம் அமைந்தது. அடியேன் எழுதிய, என் ஜீரக பிரியாணி, என் ஜீவனே நீதான்டி” என்ற பாடலை இருவருமே கேட்டார்கள்! பாடலின் இரண்டாம் சரணத்தில், “நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே” என்று எழுதியிருந்த வரிகளை லிங்குசாமி சார் வெகுவாக பாராட்டினார். சரண் சாரும் ஊக்கத்தை அள்ளித்தெளித்தார். சரண் சார் என் வாசிப்பு பழக்கத்தைக் கேட்டறிந்ததும், அவர் எழுதிய இந்த நூலை, “அன்பு மு.ஜெகன் கவிராஜ் விடாமல் முன்னேறுங்கள்” என கையெழுத்திட்டு தந்தார். பூரித்து மகிழ்ந்தேன்

அவரின் ஹைக்கூ பெருங்கடலில் நிறைய முத்துக்கள். என் கை கொண்டதை மட்டும் அள்ளி உங்களிடம் தருகிறேன். நீங்கள் அள்ளிக்கொள்ளவும் இதில் நிறைய உண்டு

/பழக்கத்தோசத்தில் நாலு காப்பி என்றார்கள்
மூன்று முதியர்வகள்/

என்ற கவிதை ஒரு கணம் திடுக்கிடலை தந்தது. ஒரு காபி சொல்லும் நேரத்திற்குள் ஒரு வாழ்வைச் சொல்லிவிடுகிறது இந்தக் கவிதை

/குரங்குக்கு வேடிக்கை காட்ட
எத்தனை மனிதர்கள்/

என்ற கவிதை விந்தை மனிதர்களைச் சுட்டும் எதார்த்த பகடி

/திருஷ்டிப் பொட்டு வைத்தபோது விரலில் ஒட்டிக்கொண்டது குழந்தை/

படங்களில் நிறைய Wow factor வேண்டும் என்போமல்லவா! அதை இந்தக் கவிதையில் நிகழ்த்துகிறார் சரண் சார்

/பல் விழுந்ததை
மறைத்தான் பேரன்
சிரித்தார் தாத்தா/

என்ற வரிகள் எங்கள் ஊரின் தங்கையா தாத்தாவை நினைவூட்டியது. “பல்லு இல்லன்னு லக்கல் பண்ணாத பொத்தமாடா.. ஒனக்கும் வயசாகும்” என்று அவர் சொன்ன வார்த்தைகள் மனம் முன் வந்து போனது

/ நீர் மேல்
எழுத்துக்கள்
வாத்துக்கூட்டம்/

நீரில் செல்லும் வாத்துக்களை எழுத்துக்களாகப் பார்க்க எவ்வளவு ரசனையான கவிதைக்கண்கள் வேண்டும்!?

/தண்டவாளம் நெடுக
அகலிகைகள்
ரயிலில் சென்றான் ராமன்/

ஒரு இதிகாசத்தின் முக்கிய காட்சியை வேறோரு பரிணாமத்தில் விமர்சனம் செய்கிறது இந்தக்கவிதை. “ராமனின் அப்பாவுக்கு ஆயிரம் மனைவிகள். ஒரு சந்தேகமும் இல்லை. ராமனுக்கு ஒரே மனைவி ஆயிரம் சந்தேகம்” என்ற கபிலனின் வரிகள் நினைவுக்கு வந்தது

/நிலா ஓட
ரயில் துரத்த
ஊர் சேரும் சூரியன்/

ரயில் துரத்தும் நிலாவைப் பார்த்தபடி ரிசர்வ் பெட்டியின் ஜன்னலோர பயணியும், அன்ரிசர்வ் பெட்டியின் வாசலோர பயணியும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்தேன். சூரியன் சீக்கிரம் வரவேண்டும் என்று ஒருவனும், நிலவு இப்படியே தொடர வேண்டும் என்று ஒருவனும் இந்தப்பயணத்தில் நினைத்திருக்க கூடும்! நான் நினைத்திருக்கேன்

ரயிலில் செல்லும் இரவுப்பயணத்தில் நிலாவையும் சூரியனையும் கூட்டாளியாக்கிய இந்தக்கவிதை சரண் சார் கற்பனையின் வெளிச்சம் என்பேன்

ஹைக்கூ வாசித்து ரொம்ப காலம் ஆயிற்று! சரண் சாரின் நீர்மேல் எழுத்துக்கள் நிறைவான உணர்வை தந்தது

Good one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *