அப்பர் கம்பன் ஆகியோர் பற்றிய கட்டுரையில் நாத்திக பிறழ்வோ, ஆண்டாளைப் பேசுகையில் கலகச் செயலோ, பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் பற்றிய கட்டுரைகளில் கழகச் சார்போ எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க இவர்களால் தமிழ்மொழி மேம்பட்டதை மட்டும் மிகையின்றி சொல்லி அசத்தி இருக்கிறார் வைரமுத்து.
திரைகடல் தாண்டி திரவியம் தேடியவர் போல் இந்நூலெங்கும் வைரமுத்துவின் பேருழைப்பு தெரிகிறது.
வைரமுத்து சொல்லாட்சியில் மிகப்பெரிய ஆளுமை தான். ஆனால் அதன் மீது நமக்கொரு விமர்சனமும் உண்டு. வைரமுத்து நமக்கு ஒரு பாடம் எடுக்கிறார் என்றால் அதில் நம் பக்கத்து வீட்டு வாத்தியார் தெரிய மாட்டார். மிகப்பெரிய உயரம் தொட்ட ஒரு பேரரிஞர் தான் தெரிவார். அதாவது வாசிக்கும் நம்மை எழுத்தாளன் அவன் மடியில் அமர்த்திக் கொள்ள வேண்டும். வைரமுத்து தன் சொற்களால் நான் எல்லா வாத்தியார்களுக்கும் மேம்பட்டவர் என்பதைக் காட்டுவார். ஆக்ஷுவலா அது அழகு தான். அதுவே நம்மை அவரோடு நெருங்க விடாத மனநிலைக்கு கொண்டு போய்விடுகிறது. உதாரணத்திற்கு கடவுள் வழிபாடு அச்சத்தில் இருந்து தோன்றியது என்பதை, “அச்சத்தின் கருப்பையில் தான் கடவுள் தோன்றினார்” என்பார். கட்டுரைகளிலும் அவர் கவிஞராக வெளிப்பட்டு நிற்பதால் சாதா சொல்லையும் ஸ்பெசல் சாதா சொல்லாக மாற்றி நமக்கும் அவருக்குமான மொழித் தொடர்பை சிறிதாக பிரித்து வைக்கிறார்.
வைரமுத்து செய்யும் அரசியல் யாருக்கும் வலிக்காது. ஆனால் இந்த நூலில் அவர் பேசியுள்ள அரசியல் கவனிக்க வைக்கிறது.
வடக்கின் குரல், “ராமன் உள்ளவரை இந்துமதம் இருக்கும் அதனால் ராமனை காப்பாற்றுங்கள்” என்கிறது. ஆனால் தெற்கின் குரல், “தமிழ் உள்ளவரை கம்பன் இருப்பான் அதனால் கம்பனை காப்பாற்றுங்கள்” என்று எழுதுகிறார்.
இந்து மத கருத்துக்களை ஏற்க முடியாவிட்டாலும் கடவுளை முன்வைத்து அப்பர் கம்பர் இயற்றிய தமிழ்ப்பாடல்கள் முன் நாம் தோற்று நிற்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வைரமுத்துவிடம் இருக்கிறது.
ஆண்டாள் பாடல்களைப் பற்றி வைரமுத்து எழுதி இருப்பது கடவுள் பக்தர்களுக்கும் பிடிக்கும், நாத்திக சித்தர்களுக்கும் பிடிக்கும். பெண் எப்படி என்பதையும் பெண்ணை எப்படி வைக்க வேண்டும் என்பதையும் மனுதர்மம் மனசாட்சியின்றி எழுதி இருக்கிறது. அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டுள்ள ஒரு ‘சமய’த்தில், ஒரு பெண்ணான ஆண்டாள், “கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்” என்று தான் காமுற்ற ஆசைகளை வெளிப்படையாக அறிவிக்கிறார். “திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ” என்று கண்ணனின் வாய்ச்சுவையை அறிய விரும்புகிறாள். ஒரு பெண் தன் காதலை வெளிப்படுத்துதல் பாவம் என்று கருதும் சமூகத்தில் ஆண்டாளின் குரல் விடுதலைக் குரல் என்கிறது வைரமுத்துவின் விரல்.
பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் ஆகியோரின் அரசியல் வாழ்வை மெலிதாக தொட்டுவிட்டு அரசியல் வழியாக அவர்கள் தமிழுக்கு என்ன வலிமை சேர்த்தார்கள் என்பதையும், தமிழால் என்ன வலிமை பெற்றார்கள் என்பதையும் தரமாக பதிவு செய்துள்ளார்.
மனிதனுக்குப் பிறகு பிறந்தது தான் கடவுள் என்பது வைரமுத்துவின் முடிவு. இந்த உலகத்தோற்றமே கடவுளின் சிருஷ்டி என்பது இறை நம்பிக்கையாளர்கள் முடிவு. மேலும் நாத்திகவாதிகளுக்கு வைரமுத்து ஒரு விசயம் சொல்கிறார்.
“கடவுள் மறுப்பு என்பது சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்தில் இருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது” என்கிறார். ஐயம் அக்செப்டட்.
இப்படி ஒவ்வொரு கட்டுரைகளும் உய்த்து உணர வேண்டிய அம்சமாக உள்ளது. தமிழ்சினிமாவில் மிக காத்திரமான பாடலாசியர் என்ற பெருமைகளை விட இந்தத் தமிழாற்றுப்படை வைரமுத்துவின் உச்சப்பெருமை எனச்சொல்லலாம். தமிழால் அவர் பெற்ற வாழ்வை வசதியை தமிழுக்கு தொண்டு செய்வதன் மூலமாக இதைச் செதுக்கி இருக்கிறார் வைமு.
எந்தக் கண்ணாடி அணிந்து பார்த்தாலும் வைரமுத்துவின் மொழி ஆளுமை கொண்டாடப்பட வேண்டியது. “சின்மயி”களுக்காக அவரின் ” பென்”மதி’யை அலட்சியப்படுத்தினால் அது அயோக்கியத் தனம் தான். பொன்னியின் செல்வனால் வைரமுத்துவிற்கு எந்த இழப்பும் இல்லை என்பது தமிழாற்றுப்படையின் விமர்சனக் குறிப்பின் கடைசி வார்த்தை!

