தீ பரவட்டும் என்ற வார்த்தையை சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணி நிஜமாக்கியுள்ளது. நிச்சயமாக இது தீ தெறிக்கும் வெற்றி தான்
1958- காலகட்டம் மற்றும் 63 காலகட்டத்தில் தமிழகத்தில் பற்றியெறிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றித் தான் கதையை பின்னியுள்ளனர். படத்தின் வியாபார கணக்கை விடுத்து, ஒரு உணர்ச்சி மிகுந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிந்துள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு முதல் வாழ்த்து
ரயில் எஞ்சினில் கரி அள்ளிப்போடும் தொழிலாளியான சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் தன் தம்பி அதர்வாவைக் கண்டிக்கிறார். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனே போராட்டத்தை முன்னெடுக்கும் சூழல் உருவாகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மாநில உரிமை முதற்கொண்டு ஏழை மக்களின் வேலை வாய்ப்பு வரை இந்தி திணிப்பில் அடங்கியுள்ளது. அதனால் சிவகார்த்திகேயன் இப்போராட்டத்தை மூர்க்கமாக முன்னெடுக்க…அதைவிட மூர்க்கமாக ரவிமோகன் எதிர்க்கிறார். இருவருக்குமான முரணின் முடிவு என்ன என்பதும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைச்சல் என்ன என்பதுமே படத்தின் கதை
சிவகார்த்திகேயன் தன்னை மிக முதிர்ச்சியான நடிகனாக வார்த்துக் கொண்டுள்ளார். தம்பிமேல் கொண்டுள்ள அன்பு, தமிழ் மேல் கொண்டுள்ள அக்கறை என ஒவ்வொரு ஏரியாவிலும் சிவகார்த்திகேயன் அடித்து ஆடியுள்ளார். ரவிமோகன் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஸ்ரீலீலா. முதல் படத்திலே இப்படியொரு நடிப்பா!! அதர்வா கொடுத்த கேரக்டருக்கு கூடுதலாகவே சிறப்பு செய்துள்ளார். குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் படத்தில் சம்பவம் செய்துள்ளனர்
படத்தின் மற்றொரு ஹீரோ திரைக்குப் பின்னால் உள்ளார். யெஸ் அவர் தான் GV பிரகாஷ். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே பேரதற்புதம். அவருக்கு இது 100-ஆவது படமும் கூட. வாழ்த்துகள்
ரவி.கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு மாஸ்டர் பீஸ். 1963 கால கட்ட லைட்டிங்& கலரிங்-ஐ பக்காவாக கொண்டு வந்துள்ளார். ஆர்ட் வொர்க்கும் படத்தின் பெருந்தூண்
மிகவும் காத்திரமான சம்பவத்தை பொறுப்புணர்ந்து கையாண்டுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அரசியல் வாதிகளுக்குச் சாதகமாக பயன்படுத்தாமல், அந்த கிரடிட்-ஐ மாணவர்களுக்கு கொடுத்த விதம் அழகு. புரட்சி பேசும் படத்தில் மகிழ்ச்சி இருக்காதா என்ன? நிச்சயமாக படம் நம்மை துளியும் சோர்வடையாமல் மகிழ வைக்கிறது. அதிகாரம் பலம் கொண்டு ஒரு மொழியை நம் மீது திணித்தது. அதை எதிர்த்து மறம் நிறைந்த தமிழினம் வென்றது. இந்த உணர்ச்சி மிகு வரலாற்றை செம்மையாக பேசியிருப்பதால் பரசக்திக்கு நாம் 🔥🔥🔥 பயர் விட்டே ஆகவேண்டும்
4.5/5
-வெண்பா தமிழ்

