சொடலி- நூல் விமர்சனம்

சகோதரர் வசந்தி முனீஸோட வட்டார வழக்கு எழுத்துப் பத்தி முருகன் மந்திரம் சார் நிறைய சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இந்த புக்ல எங்க வட்டார வழக்கு விளைஞ்சி செழிச்சி பரவிக்கிடக்கு..

சாதி பத்தியும் அடக்குமுற பத்தியும் நிறைய கதைவ இருக்கு. எனக்கு எல்லாக் கதையோட முடிவிலயும் இருந்த துணிச்சலும் திருப்பி அடிச்ச கம்பீரமும் ரொம்ப பிடிச்சிருந்தது. ஞாயத்த கேட்ட சொடலிய சொடலி ஊர்க்காரங்கள ஆதிக்கம் அடிச்சிதுன்னா, கதை முடியுமுன்ன ஆதிக்க வெறி ஆளுவ எல்லாத்தையும் சோலிய முடிக்கிறா சொடலி. இப்படி எல்லாக் கதையிலும் கதை முடியும் போது பாவப்பட்ட ஜனங்க மேல வார பரிதாபத்த விட பெரும ஓங்கி நிக்கி. இந்த இடத்துல தான் இந்த நூல் உசந்து நிக்கி.

புளியமரம் பத்தி ஒரு கதை இருக்கு. அதப்படிக்கும் போது என்னோட பால்யத்துல எங்க ராசம்மத்த வீட்டுமுன்ன இப்படியொரு புளியமரம் நின்னுது அது யாவத்துக்கு வந்து மனச குலைச்சிப் போட்டுது.

வள்ளியக்கா, பாப்பா மயினி, சுமதி மயினி, சுதா, விஜி, ஜோதியண்ணன், அளவாரி முருகன்ணன், பாக்கியராஜி, சு.சசியண்ணன், கனகராஜ், போண்டா சத்தி, கணேசன், எங்கண்ணன், பொன்மதியக்கா, ராதிகா, சின்னத்த, ஜெயலட்சுமி மயினி, பிரேமா, ராஜேஷ், பானா முருகன் மச்சான்,ராசம்மத்த, ராணி மயினி, உமாக்கா, கனியம் பெரியம்ம… அடேயப்பா இன்னும் பெரிய லிஸ்ட் உண்டு. அந்த புளியமரத்தை சுத்தி எங்க எல்லாருக்கும் ஒரு வாழ்க்க இருந்தது. ஆனா இந்தக் கதையில பூர்ணம்மா புளியமரத்த காப்பாத்துன மாதி எங்க யாராலயும் அந்த மரத்த காப்பத்த முடியல. ஆனா மரத்த வெட்டும் போது ஈரக்கொலய அத்து எடுத்த மாதி வலிச்சது மட்டும் நெசம். ஒரு புத்தகம் நம்ம மனசக் கீறி பழைய வாழ்க்கய யாவப்படுத்துனா அது நல்ல இலக்கியம்னு சொல்வாங்க. எனக்கு இந்தப் புத்தகம் அப்படி பட்டுது.

வாழ்துகள் சகோ..
Muneesh Perumal

நன்றி சார்
Murugan Manthiram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *