தலைப்பே ஒரு அருமையான கவிதை தான். பொய்கள் எப்போதும் பெரிதும் காயத்தை கொடுக்கும் ஒன்று தான். ஆனால் சில பொய்கள் இருக்கின்றன. அவைகளுக்கு அழ வைக்கத்தெரியாது. எழ வைக்கத்தெரியும். சில பொய்கள் அதிலுள்ள உண்மையை ரசிக்க வைக்கும். யெஸ் காதலில் மட்டும் தான் அப்படியான பொய்கள் சாத்தியம்.
அண்ணன் குணசீலனுக்குள் கவிதை மனம் உண்டென்பது தெரியும். நான் அவரின் முதல் நூலே கவிதை நூலாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். மாறாக ‘சடுகுடு சண்டியன்கள்’ என ஒரு அற்புதமான சிறுகதை தொகுப்பைத் தந்தார். எங்கள் நெல்லை மண்ணின் மொழியைச் சிறப்பாக எழுதும் மிகச்சிலரில் ஒருவர் அண்ணன் குணசீலன். சினிமா PRO, நீலம் புரொடக்சனின் PRO, ஊடகப்பணி, எழுத்துப்பணி, முத்தாய்ப்பாக இயக்குநர் என வந்து நிற்கிறது அவரது பயணம். நிறைய வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழியை அவர் தனது கவிமனத்தில் வைத்துள்ளார். அதுதான் அவரை வழி நடத்துகிறது என்பேன்.
இந்த நூலின் முதல் கவிதையே என்னை நூலுக்குள் வழி நடத்திச்சென்றது..
“ஒருகாதல் கூட இல்லாத
ஒருதலைக்காதல் கூட இல்லாத
நபர்களின்
நாட்கள்
நரகம் ஆகாதா?” என்று காதல் சுளி போட்டு துவங்கியுள்ளார் கவிதைகளை
“உன் நினைவு இல்லாத நேரங்களே எனக்கு நோயாகிறது”
வாழ்ந்து பட்டவனுக்குத் தான் வரும் இந்த வரிகள்
“இன்னும் நம் மீது அன்பாகத்தான் இருக்கிறார்கள் என்ற பொய் கூட வாழ வைத்துவிடும்”
இந்த வரிகளை எளிதில் கடக்கவே முடியாது.
“ஜெகனு அடிச்சி சொல்தேம்ல. சடக்குன்னு ஒன்ன அவா வேண்டான்னுட்டாலும் எப்படியும் ஒன்ன நினைக்காம இருக்கமிண்டால. பிள்ளிய மனசு எனக்குத் தெரியும்டே. அதனால அவா ஒனக்கு இல்லன்னு நினைச்சி அழாத. அவா இப்பமும் ஒன்ன நினைக்கான்னு நினைச்சி சிரி” இப்படி ஆறுதலாக சொல்லப்பட்ட எங்க ஊர் அண்ணனின் வார்த்தைகள் தான் என் காயத்தை ஆற்றியது. அதனால் இந்த வரிகள் எனக்கான வரிகள். இந்த நூலின் வெற்றியே எழுதியவரையும் வாசிப்பவரையும் ஒன்றாக்கும் வித்தை இதிலுள்ளது என்பது தான். இந்தக் கவிதைகளை குணசீலன் எழுதியிருக்கிறார் நான் வாசிக்கிறேன் என்ற எண்ணம் யாருக்கும் வராது. இதை நான் தான் எழுத முடியும். இது என் கவிதை என்றெண்ணத்தை தோற்றுவித்து வாசிப்பவனையும் கூட்டுப்படைப்பாளியாக்கி விடுகிறது அண்ணனின் கவிதைகள்
காதல் கவிதைகளைப் போலவே சாதியத்தைச் சொல்லும் கவிதைகளும் காத்திரமானவை.
“எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். என் சாமியும் உன் சாமியும் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொள்ளவில்லை” ஒரு சோற்றுப்பதம் இந்த வரிகள்
“காதலித்ததை கண்டித்ததால் தண்டவாளத்தில் தலை குடுத்துதான் கன்னியானாள் சித்தி என்பது தாத்தா செத்தபிறகு தான் தெரிய வந்தது”
இந்த கவிதைக்குள் இருக்கும் வலியும் வலி நிறைந்த வாழ்வும் மனதை உறைய வைத்தது
இன்னும் நிறைய உதாரண வரிகளை அடுக்கி சிலாகிக்க முடியும். அப்படியானதொரு வாய்ப்பை வாசிக்கும் எவருக்கும் வழங்கும் அண்ணனின் கவிதைகள்
(Art from roots production பதிப்பகம் நூலை செம்மையுற வடிவமைத்து அச்சடித்துள்ளனர்👌)

