சடுகுடு சண்டியன்கள்- நூல் விமர்சனம்

“வெளிநாட்டுக்குப் போனா நெறயா அள்ளிறலாம்”னு ஒரு எண்ணத்துல வீடே சேர்ந்து சங்கரனை அனுப்பி வைக்கி. புதுசா கல்யாணம் முடிஞ்ச சங்கரன் ராவும் பகலும் பொண்டாட்டி சேலையை உருவுறதையே வேலையா வச்சிருக்கான். ஒரு கட்டத்துல தோலுல ஒட்டிருக்க அட்டயப்பிரிக்க மாதி பொண்டாட்டியை விட்டு அவனப் பிரிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காவ. அது 90 காலகட்டம். அப்பம்லாம் போனு வசதி பெருசா கிடையாதுல்லா! இங்க்லாந்து லெட்டர் தான. பொண்டாட்டிக்கு அதுல எழுதி எழுதி தள்ளுதான் சங்கரன். தங்கிருக்க ரூம்ல பக்கத்துல இருக்க ஒருத்தன் ஒரு ரேடியோ கேசட்ல பொண்டாட்டிக்கு பேசி ரிக்கார்ட் பண்ணுதான் . “ஏய் இதென்னப்பா சங்கதி புதுசா இருக்கு”ன்னு சங்கரன் அவன்கிட்ட கேட்க..அவன் எழுத்தா போய் பொண்டாட்டியைச் சேர்றதை விட குரலா போய்ச் சேர்ந்தா நல்லாருக்கும்னு சொல்ல..சங்கரனும் ரிக்கார்ட் பண்றான் புதுப்பொண்டாட்டிக்கு..

கட்

இதுக்கு மேல இந்தியாப்பாசம்னு வார இந்தக் கதையில சங்கரன் தான் பொண்டாட்டிட்ட என்ன பேசுனான்றதும், அந்தப் பேச்சு கேசட்டு ஊருல என்னலாம் செஞ்சிதுங்கதும் செம்ம ட்விஸ்ட்.

திருநெல்வேலி வட்டார வழக்கு சாதிக்குச் சாதி மாறும். ஏல என்ற வார்த்தையை மட்டும் தான் நெல்லைத் தமிழா பொதுமைப்படுத்தலாம். அம்ம, எம்மோவ், ஆத்தா, என அம்மைக்கே நிறைய ஸ்லாங் உண்டு நெல்லையில. குணாண்ணன் ஓரளவு நெல்லைத் தமிழைப் பொதுமைப்படுத்தி இந்த நூல்ல நச்சின்னு 9 கதைகளை கொடுத்திருக்கார். ஒவ்வொரு கதையும் அவர் நம்ம பக்கத்துல உக்காந்து சொன்னமாதியே இருக்கு. குணாண்ணனை தெரிஞ்சவங்களுக்கு இந்தக் கதையைப் படிக்கும் போது அவர் குரலு காதுல கேட்டு மனசுல இறங்கும். அதான் இந்த நூலோட வெற்றின்னு சொல்வேன்

பெரும்பாலான கதைகள் 1980, 90 கால கட்டத்து கதைகள். அந்தக்கால வாழ்க்கைக்குள்ள போய்ட்டு வாரமாதியான உணர்வை எல்லாக் கதைகளுமே தந்திடுது. எல்லாக் கதைகளோட கேரக்டர்களும் நமக்குத் தெரிஞ்சவங்களாகவோ, ஏன் நம்மளாகவோ தான் இருக்கிறோம்..

சாமியாடி மாயாண்டித் தாத்தா கதை எங்கூர் சடையரை ஞாபகப்படுத்தது. சடையர் நைட்டுல நாலு எளவட்டப் பயல்வளைக் கூட்டிட்டு மொச பிடிக்கப் பேருக்காரு. எதுர்ல தீப்பந்தத்தோட சொல்லமாடனுக்கு சாமியாடுற ஒருத்தரு வந்து நிக்காரு. காட்டுக்குள்ள சாமிக்கு எதுர்ல யாரும் மாட்டுனா காலின்னு ஒரு நம்பிக்கை உண்டு..அந்த நம்பிக்கையை உறுதியா நம்புறது அந்தந்த சாமியாடிவ தான் போல..

சாமியாடி வந்தவரு, சடையரைப் பார்த்து, “உங்க நாலுவேரையும் நான் ஏத்துக்கிடுதேம்ல” சொல்ல, சடையத்தாத்தாவுக்கு கோவம் வந்துட்டு. நட்டமா நின்னுக்கிட்டே கால்ல மண்ணக் கோதி சாமியாடியோட தீப்பந்தத்துல போட்டுட்டு, “நான் உன்னை ஏத்துக்கிடுதேம்ல”ன்னாரு. பந்தம் அணைஞ்சதும் சாமியாடி பயந்து அலறிட்டாரு. பிறவு சடையரு அவருக்குத் திருநீரு போட்டு பந்தத்தை பத்த வச்சி அவரைக் கோயிலுக்கு கூட்டியாந்தாரு. மாயாண்டித் தாத்தா கதையில வேட்டைக்குப் போன சாமியாடி என்னபாடு படுதார்னு படிக்கும் போது கிராம மக்களோட அதிகப்படியான நம்பிக்கையும் வெள்ளந்தித் தனமும் நம்மை வெடிச்சி சிரிக்க வைக்கும்

வாழ்க்கையில சக மனுசங்களுக்கு வார சாவை ரொம்பச் சாதாரணமா எடுத்துக்கிற மகேஷ் வார கதை ஒன்னுல எனக்கு எங்கூர்ல செத்துப்போன தம்பி ஒருத்தன் யாவத்துக்கு வந்தான்

இப்படி எல்லாக் கதையும் நம்மோட கனெக்ட் ஆவதாலே குணாண்ணனோட இந்தப்புத்தகம் நெஞ்சுக்கு நெருக்கமா மாறுது

சாதி என்னலாம் செய்யும், சாதியைத் தாண்டி மனசுக்குள்ள தொலையாம கிடக்க ஈரம் என்ன செய்யும், பொருளாதார வேட்கை வாழ்க்கையை எப்படி நசுக்கிப் போடும்னு எழுத்து வழியா கருத்தும் பொதஞ்சி கிடக்கு நூல்ல

ஒவ்வொரு கதையும் சிறுகதை என்ற வரையறையைத் தாண்டி கொஞ்சம் நீண்டு கிடக்கு. எல்லாக் கதைக்கும் சரியான நிறைவு கொடுக்க முயற்சித்ததால கதைவ பெருசா இருக்கு. கதைகள் வழியே காட்சிகள் கண்ணுக்குள்ள வாரதுல தான் குணாண்ணனுக்குள்ள இருக்குற டைரக்டர் வெளிப்படுதாரு. நிச்சயமாக இன்னும் ஒரு வருசத்துல பரியேறும் பெருமாள் மாதியோ..இல்ல களவாணி மாதியோ ஒரு கதையோட திரையில வருவார் அண்ணன். அதற்கான அச்சாரமும் அடையாளமுமா இருக்கு இந்தச் சடுகுடு சண்டியன்கள்😎😎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *