ரெட்ட தல- விமர்சனம்

ஒத்த தலைவலி வந்தாலே ஆயிரம் பிரச்சனை வரும். இதில் ஹீரோவிற்கு இரட்டை தலைவலி. பாவம் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் ஒன்லைன்

அநாதைச் சிறுவனான அருண்விஜய்க்கு சிறுவயதிலே தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சிறு வயது நாயகி. சித்தி இத்னானி அதைத் தடுக்கிறார். பின் இருவரும் பிரிந்து வளர்கிறார்கள். சில ஆண்டுகள் கடந்து தன் காதலி மற்றும் தோழியான சித்தி இத்னானியை சந்திக்க வருகிறார் அருண்விஜய். சித்தி இத்னானி நாம கல்யாணம் பண்ணிக்கணும்னா பணம் நிறைய வேண்டும் என்ற முடிவை எடுக்கிறார். இச்சூழலில் பெரும் கோடீஸ்வரரான இன்னொரு அருண்விஜய் என்ட்ரி ஆகிறார். பணத்தின் மேல் மோகம் கொண்ட இத்னானி தன் காதலன் அருண்விஜயிடம் கோடீஸ்வரன் அருண்விஜயை போட்டுத் தள்ளச் சொல்கிறார். அதன்பின் என்னென்ன திருப்பங்கள் நடக்கிறது என்பதே படத்தின் மீதி திரைக்கதை

எந்தச் சட்டைக் கொடுத்தாலும் சட்டைக்கேற்ப என் உடலை வளைத்துக் கொள்வேன் என்ற உறுதிகொண்ட அருண்விஜய் படம் நெடுக மாஸ் காண்பித்துள்ளார். எளிய காதலன், கோவா டான் என இரு கேரக்டரிலும் செம்மயான நடிப்பை வழங்கியுள்ளார். சித்தி இத்னானி கூடுமான வரை நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அவரின் கேரக்டர் ஸ்கெட்ச் சற்று வீக். ஹரிஷ் பேரொடி, தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய் உள்பட பல துணை நடிகர்கள் ஒகே ரகம். ஜான் விஜய் மட்டும் அவ்வப்போது இரிடேட் செய்கிறார்

ஒளிப்பதிவாளர் திஜோ டோமி பில்டப் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் இஷ்டத்திற்கும் இறங்கி அடித்துள்ளார். ஆனால் சில முக்கியமான எமோஷ்னல் காட்சிகளில் துல்லியமான ஷாட்ஸை வைக்கவில்லை. சாம் சி எஸ். வழக்கம் போல வாசித்துத் தள்ளியுள்ளார். சில இடங்களில் படத்தைக் காப்பாற்றுவதும் அவரே

ஒரேப்போல் உருவ ஒற்றுமை கொண்ட ஹீரோக்கள் கதைகள் நிறைய பார்த்திருந்தாலும், இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் சில இடங்களில் புதுமை சேர்த்துள்ளார். குறிப்பாக ஒரு அருண்விஜயின் கால் பிரச்சனையை காட்டிய இடம் அசத்தல் ட்விஸ்ட். இதைப் போல இன்னும் சில ட்விஸ்ட்ஸ் இன்ட்ரெஸ்டிங்! ஆனால் மொத்தமாக பார்க்கும் போது திரைக்கதையும் மேக்கிங்கும் இன்னும் வளமையோடு அமைந்திருக்கலாம் என்றே தோன்றியது

லாஜிக் பற்றி யோசிக்காமல் ஆக்‌ஷனை ரசிக்கும் ரசிகர்களுக்கு ரெட்ட தல நல்ல சாய்ஸ்
3/5
– வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *