பின் நகர்ந்த காலம்- நூல் விமர்சனம்

முன் நகரும் நாட்களுக்காக துருவித் திரிந்தே அலைவோர்க்கு பின் நகர்ந்த நாட்களை நினைப்பதும்..நினைவை துய்ப்பதுவும் அபூர்வமான ஒன்று. ஆனால் அபூர்வமாய் அது எழுத்தாளர்களுக்கு வாய்த்து விடுகிறது.

எழுத்து வினைக்கு கடந்தகாலம் தான் கர்த்தா போல..

வண்ணநிலவன் தன் வயிற்றுப்பாட்டை மட்டும் இதில் பாடிவைக்கவில்லை…அவர் திருநெல்வேலியில் பார்த்த குமஸ்தா வேலையில் இருந்து இறுதியில் துக்ளக் பத்திரிகையில் இணைந்தது வரை அவர் அடுக்கியிருக்கும் மனிதர்களின் முகவரியும் அகவரியும் அத்தனை அழகு ..

வண்ணதாசன் குணம் பற்றியும் மனம் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தோழர் அ.ப. இராசா வண்ணதாசன் பற்றிப் பேசினாலே மனம் பொங்கித் தழும்புவார். இந்த நூலில் வண்ணதாசனின் இயல்பு பற்றி வண்ணநிலவன் எழுதியிருப்பதைப் படிக்கையில் வண்ணதாசன் காலத்தில் வாழ்வது எவ்வளவு சுகமானது என்று தோன்றியது

திருநெல்வேலியில் மிகவும் வறுமைக்கு வாக்கப்பட்ட ஒரு குமஸ்தாவுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையும் அந்தக் கடிதங்கள் தாங்கி வரும் உணர்வையும் அழகியலையும் வண்ணநிலவன் அச்சு கோர்த்திருக்கிறார். இன்று விக்கிரமாதித்தியன் என அறியப்படும் கவிஞர் நம்பிராஜனின் இலக்கற்ற சுற்றலையும் இலக்கியம் மீதும் தன் மீதும் இருந்த அன்பையும் வண்ணநிலவன் வரிகளாக்கி இருக்கிறார்..

வண்ணநிலவனின் நாட்குறிப்பு எனச் சுருக்கிவிட முடியாத நூல் இது..

தஞ்சை பிரகாஷ், சுந்தர ராமசாமி, தி.க.சி, வண்ணதாசன், வல்லிக்கண்ணன், கி.ரா, ருத்ரையா, விக்கிரமாதித்தியன் என நிறைய ஆளுமைகள் பற்றிய தகவல்களும் நூலில் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு

ஒரு எழுத்தாளரை சந்திக்கச் செல்வது கருவறையில் சாமி பார்ப்பதற்கு நிகரானது என்பதாக இருந்தது..வல்லிக்கண்ணன், வண்ணதாசன் ஆகியோரை இவர் சந்திக்கச் சென்ற அத்தியாயம்..

நிறைவாக,

நல்ல எழுத்து வாய்க்கப்பட்டும் ஒரு வாய் சோற்றுக்கு அது அலைய விட்டிருக்கிறது. ஆனாலும் என்ன நிறைவில் அதுதான் அவரை நிறைகுடமாக்கி இருக்கிறது என்பதே நமக்கான ஆறுதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *