ஒரு சொல் கேளீர்- நூல் விமர்சனம்

(தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)

சிறப்பான, மிகவும் பயனுள்ள நூல் இது. அரவிந்தன் அவர்களின் எழுத்து நடையில் எளிமையும், தமிழ் மீதான அக்கறையும் கொட்டிக்கிடக்கிறது

“தமிழில் பேசும்போதோ, எழுதும் போதோ பிழை நேர்ந்தால் சகித்துக் கொண்டுச் செல்லாதீர்கள், சரி செய்துவிட்டுச் செல்லுங்கள்” என்று ஒரு இலக்கியவாதி சொன்னார்.

இந்த நூல் கூடுமான வரை தமிழைப் பிழையின்றி எழுதும் திறனை நமக்குள் ஏற்றுகிறது. வாக்கியத்தில் முக்கியமான வார்த்தைகளை அமைப்பதில் எவ்வளவு கவனம் வேண்டும் என்பதை உதாரணத்துடன் சொல்லித்தந்துள்ளார் அரவிந்தன்

ஊடகத்தில் பணிபுரியும் இளைஞர்கள் உள்பட சமூக ஊடக கம்பு அன்பர்களுக்கும் இந்த நூல் ஒரு நல்ல கையேடு

“1995-ல் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் திரைப்படமாக்கப்பட்டது” இது ஒரு செய்தி. இந்தச் செய்தியில் ஜானகிராமன் இந்த நாவலை 1995-ல் தான் எழுதினாரா என்று கருதி விட வாய்ப்பு இருக்கிறது.

இந்தச் செய்தியை, “தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் 1995-ல் படமாக்கப்பட்டது” என்று எழுதுவதே சரி.

இப்படியான உதாரணங்களோடு வாக்கியங்களை எப்படி அமைக்க வேண்டும் என்று வலிக்காமல் வகுப்பெடுத்துள்ளார் அரவிந்தன்.

சும்மா சும்மா கேள்விக்குறிகளையும் வியப்புக்குறிகளையும் வாக்கியத்திற்குள் அள்ளி வீசக்கூடாது. கேள்விக்குறியோ வியப்புக்குறியோ ஒரு வாக்கியத்தின் முடிவில் தான் வரும் என்கிறார்

நேர் கூற்றில் ஒரு வாக்கியம் எப்படி வரவேண்டும், அயல் கூற்றில் எப்படி வரவேண்டும் என்பதைச் சிறப்பான உதாரணங்களோடு சுட்டியுள்ள அரவிந்தன், கால் புள்ளி, நிறுத்தக்குறி வைப்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார்

கற்பழிப்பு என்ற வார்த்தை அகற்றப்பட வேண்டும் என்று சொல்லும் நூலாசிரியர், அதற்கான விளக்கத்தைத் தந்திருப்பது சிறப்பான ஒன்று

நாம் தினமும் பயன்படுத்தும் சொற்களை பிழையின்றி பயன்படுத்த இந்நூலில் நிறைய விசயங்கள் சொல்லப்பட்டுள்ளன

மாணவர்கள், பெற்றோர் முதல் இது குடும்பங்கள் கொண்டாட வேண்டிய தமிழ் நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *