நாகர்களின் இரகசியம்- நூல் விமர்சனம்

“பூர்வஜன்மப் பாவம்னு எதுவும் கெடையாது சதி. இந்த ஜன்மம் மட்டும் தான் நிஜம். இது மட்டுமே கண்முன்னால இருக்குற உண்மை. மத்ததெல்லாம் வெறும் கற்பனை தான். உன் மனசுக்கு அமைதியைத் தர்ற நம்பிக்கைகளை மட்டும் வெச்சுக்க” பிரசவ வேதனையில் தன் பூர்வத்தை ஆராயும் பார்வதி எனும் சதியிடம் சிவன் இத்தகைய வார்த்தைகளைச் சொல்கிறார். நிகழ்காலம் மட்டுமே நிஜம் என்ற நிதர்சன ஆன்மிகத்தை சிவனே சொல்வது நல்லறமாக கருத வேண்டிய ஒன்று.

சிவா முத்தொகுதி நூல்களின் இரண்டாம் பாகம் இந்த நாகர்களின் இரகசியம் நாவல். திபேத்திய அகதியான சிவன் மெலூஹா எனும் நகரத்தை அடைந்து, சூர்யவம்சிகளின் அரசரான தக்‌ஷரின் மகள் சதியை(பார்வதி) திருமணம் முடித்து, இல் வாழ்விற்கு எதிராக இருந்த அங்குள்ள சட்டங்களை நீக்கியிருப்பார். மேலும் சூர்யவம்சிகள் தங்களின் பகைவர்களாக நினைத்த சந்திரவம்சிகளை சூர்யவம்சிகளோடு இணைக்கவும் செய்திருப்பார் சிவன். இந்த பாகத்தில் உலகின் பொது எதிரிகள் என நாகர்களை அடையாளப் படுத்துகிறார் அரசர் தக்‌ஷர். அதனால் சிவன் நாகர்களை வெற்றிகொள்ள பெரும் படையோடு பயணிக்கிறார். ஆனால் செல்லும் பயணங்களில் நிகழும் சம்பவங்கள் பெரும் பெரும் ரகசியங்களை திறக்கிறது. தனது மனைவி சதிக்கு அவளின் முதல் கணவன் மூலமாக பிறந்த கணேஷ் என்ற யானைமுகம் கொண்ட பிள்ளை உயிரோடு இருப்பது தெரிகிறது. “உன் பிள்ளை இறந்தே பிறந்தது” என்றே சதிக்கும் சொல்லப்பட்டிருக்கும். அந்தப் பிள்ளை உயிரோடு வந்து சிவன் சதியின் இரண்டாவது பிள்ளையான கார்த்திக்கை (முருகன்) ஒரு சண்டையில் காப்பாற்றுவான். அதன்பின் இந்தக் கதையின் போக்கே மொத்தமாக மாறும். போர்க்காட்சிகளை அமீஷ் பெரும் பாய்ச்சல் கொண்டு எழுதியுள்ளார். பவித்ரா ஸ்ரீநிவாசனின் மொழிபெயர்ப்பும் அட்டகாசம்.

கதையிலுள்ள ட்விஸ்ட்களும், கேரக்டர்களும் பிரம்மாண்ட கமர்சியல் சினிமாவிற்கான மெட்டிரியல்ஸ். ஆல்ரெடி படமா வந்திருக்கான்னு தெரியல. சதி, ‘தனது முதல் கணவனுக்குப் பிறந்த மகன் கணேஷை சிவன் ஏற்றுக்கொள்வாரா?’ என்று தயக்கம் கொள்ளும் காட்சியும், சிவன் அவளின் மனதை அளந்து கணேஷை ஏற்கும் காட்சியும் எமோஷ்னலின் உச்சம். இராமபிரான் வகுத்தச் சட்டத்தின் வழியே நின்றும் தான் கொடுத்த வாக்கின் நிமித்தமும், சூர்யவம்சி அரசின் சேநாதிபதி பிரகஸ்தர் பிரம்மச்சரியத்தை காத்து வருவார். சந்திரவம்சி பேரழகியான ஆனந்தமயி அவரை தீவிரமாக காதலித்து வருவாள். இந்தக் காதலை சிவன் சேர்த்து வைக்கும் இடமும் பொயட்ரிக். இந்த இடத்தில் “இல்லறத்தை விட்டுத் தவம் இல்லை காண் இவ்வுலகில்” என்ற அய்யா வைகுண்டரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன

கெட்டவர்கள் என்று நினைப்பவர்கள் நல்லவர்களாகவும், நல்லவர்கள் என்று நம்பியவர்கள் அந்த நம்பிக்கைக்கு மாறுபாடாக இருப்பதும் இந்தக் கதைப் போக்கின் சுவராஸ்யத்தை பலமடங்கு கூட்டுகிறது. இந்த நூலை பிரிச்சுவலாகவும் அணுக முடிகிறது. கமர்சியலாகவும் ரசிக்க முடிகிறது

Yes this is mass one🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *