மிகமிக கடினமான பாதை மெளனி படைப்புகளை நெருங்கும் பாதை. கதைக்குள் நாம் பிரவேசிக்க நிறைய சொல் தடைகளைத் தாண்ட வேண்டும். அவர் தம் சொல்லாட்சிக்குள் செல்வதற்கே ஒரு நேரம் பிடிக்கிறது. ஆனால் சிரமேற்கொண்டு அவரின் எழுத்து நடைக்குள் சென்றபின் அற்புதம் கிடைக்கிறது. 1936-க்கும் 1971-க்கும் இடையே வெறும் 24 சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார் மெளனி. ஆனால் அவரைப் புதுமைப்பித்தன், ‘சிறுகதைகளின் திருமூலர்’ என்கிறார்.
ஒரு மனிதனின் புறப்பார்வையில் இந்த உலகம் மிகவும் பெரியது. அவனது அகப்பார்வை உலகை விட பெரியது. அகத்தின் கற்பனைக்கு எந்த எல்லையுமில்லை. மேலும் மனம் என்ற உருவமற்ற வஸ்து, எத்தகைய எக்ஸ்ட்ரீமிற்கும் சென்று திரும்பும். மனம் சார்ந்த, மனம் புலம்பும் கதைகளும் நூலில் உண்டு. தானொரு பெரும் படைப்பாளி என்ற பாண்டித்துவ மனம் கொண்ட மெளனியைப் பேசும் சுந்தர இராமசாமியின் கட்டுரையும் நூலில் உள்ளது. அது சிறப்பாக எழுதப்பட்டுள்ளது
சில கதைகளில் காதல் மீட்டும் இதய இசையின் ஓலமும், ஜாலமும் இடம்பெற்றுள்ளது. நகுலனை நினைவூட்டும் சுசீலா இடம்பெறும் கதையொன்று மகத்தானது என்பேன். புத்தகத்தில் முதலாவதாக இடம்பெற்றுள்ள ‘ஏன்’ என்ற கதை மனதை திருப்பிப் போட்டது.
“மூன்று நாகம் ஒன்று பாம்பு அது மூன்றும் ஆடுதப்பா. கொத்தினால் திரும்பாதப்பா அது குடி கெடுத்த பாம்பு விசம்” என்றொரு அய்யா வாசகம் உண்டு. ‘இந்த வாசகம் காமத்தை மையமாக கொண்டது’ என அன்பர் ஒருவர் சொன்னார். ‘எந்தப் பாம்பின் விசத்திலும் தப்ப முடியும் காமப் பாம்பின் விசத்தில் தப்ப முடியாது’ எனவும் சொன்னார் அவர். ‘தப்ப முடியாத ஒன்றில், சிக்காமல் இருப்பது தான் தப்புவதற்கான வழி’ என்பது இவ்வாசகம் கூறும் நல்லறம். இந்த வாசகத்தின் உட்பொருளாய் ‘மனக்கோலம்’ என்ற கதை அமைந்துள்ளது. 24 வயது கொண்ட கேசவனுக்கு எதிர்வீட்டு கெளரி மீது இச்சை. சுப்பையரின் மனைவியான கெளரி இந்த இரவு தனக்குள் வந்துவிடுவாள் என்று கற்பனை செய்கிறான் கேசவன். இரவில் அவன் சரீரத்தை பாம்புகள் தழுவுவதாக கதை முடிகிறது. மேற்சொன்ன அய்யாவின் வாசகத்தின் அபாயம் உணர்த்திய கதை இது
பொருந்தாக் காமம் வருந்த வைப்பது விதியன்றோ?!
இதுபோன்ற உதாரணமிடும் கதைகள் கொண்ட இந்த நூல் பொக்கிச வரிசைக்கானது

