1995 கால கட்டங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரு சாதிப் புள்ளிகளுக்குள் நடந்த மோதல் தான் படத்தின் மையப்புள்ளி. அந்த மோதல் கொடுந்தீயாய் பரவி நின்ற காலத்தில் அங்கிருந்து ஒரு கபடி வீரன் சாதி தாண்டி சாதிக்கத் துடிப்பதே பைசன்
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஹீரோ துருவ் விக்ரம். அவருக்கு கபடி என்றால் உயிர். அம்மா இல்லாத அவரை அடைகாத்து வளர்க்கிறார் அப்பா பசுபதி. அக்கா ரஜிதா விஜயன் துருவின் கபடி கனவிற்கு பச்சைக்கொடி காட்டினாலும் அப்பா பசுபதிக்கு பெரிதாக விருப்பமில்லை. அந்த விருப்பமின்மையை பிடி. வாத்தியார் அருவி மதன் உடைக்கிறார். அதன்பின் துருவ் கபடியில் நினைத்த இலக்கை அடைந்தாரா என்பது பரபர திரைக்கதை. இதற்கிடையில் இரு சாதி தலைவர்களுக்குள் நடக்கும் மோதல் வெட்டுக்குத்து ஆகியவை துருவ் வாழ்வில் என்னென்ன செய்கிறது என்பதும் அடிஷ்னல் கதை
நிச்சயமாக துருவ் விக்ரமிற்கு இதுதான் முதல் படம். மிகத்தரமாக நடித்துள்ளார். கபடிக்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பு. அறிமுக நடிகர்களுக்கு ஓர் படிப்பு. அடுத்ததாக திரையெங்கும் நம் அப்பாவை நினைவூட்டுபவராக கண்களையும் நெஞ்சையும் நிறைக்கிறார் பசுபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் கோலோச்சிய இரண்டு சாதி புள்ளிகளாக மலையாள நடிகர் லாலும், நமது அமீரும் நடித்துள்ளனர். லால் அந்தக் கேரக்டரை உள்வாங்கி வழக்கம் போல் அசத்தியுள்ளார். நாம் வடசென்னை ராஜனாக பார்த்த அமீர், பைசனில் தூத்துக்குடி பாண்டியராஜாவாக மொத்தமாக மாறி நிற்கிறார். வன்முறையில் இறங்கினாலும் அவருக்குள் கனியும் மனிதம் அற்புதமாக திரையில் வெளிப்பட்டிருக்கிறது. படத்தில் அவர் வருகிற நேரம் குறைவென்றாலும் மனதில் அவ்வளவு அற்புதமாக நிறைகிறார். அருவி மதனுக்கு சிறப்பான கேரக்டர். சிறப்பாகச் செய்துள்ளார். அழகம் பெருமாள் உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களும் மின்னியுள்ளனர். அனுபமா பரமேஸ்வரனின் அண்ணனாக வருபவர் அசத்தல். இரண்டு பெண் பாத்திரங்களில் ரஜிதா விஜயன் ஈர்க்கிறார்.
எழிலரசு கே ஒளிப்பதிவில் அபார பாய்ச்சல். 90 காலகட்டங்களின் லைட்டிங்-ஐ படத்திற்குள் படர விட்டுள்ளார். கலை இயக்குநரின் பேருழைப்பும் படத்தில் தெரிகிறது. படத்தில் நிஜமான காளமாடன் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரச்சன்னா தான். மனிதர் இசையில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளார். திருநெல்வேலி தூத்துக்குடி மண்ணின் வேர் வரை பாய்ந்து இசைத்துள்ளார். பாடல்கள் அசத்தல் என்றால் பின்னணி இசை மிரட்டல்
வெங்கடேசப் பண்ணையார் பசுபதி பாண்டியன் என்ற இருவரின் சொந்தப் பகைக்குள் ஒரு இளைஞனின் கபடி கனவு எப்படி பயணப்பட்டது என்ற உண்மைச் சம்பவத்தை பேலன்ஸிங்காக சொல்லியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். சினிமாவின் அத்தனை கிராப்டையும் அறிந்து வைத்துள்ள மாபெரும் படைப்பாளிகளில் மாரியும் ஒருவர் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணமாகியுள்ளது. மேக்கிங்கில் அப்படியொரு பாய்ச்சல்.
இருசாதிப் பகையை பேசியிருந்தாலும் இரு சாராரின் நியாய அநியாயங்களை சரியாகப் பேசியுள்ளார். முக்கியமாக பசுபதி பாண்டியன் இனத்தைச் சேர்ந்த கபடி வீரருக்கு, வெங்கடேசப்பண்ணையார் ஆதரவு கொடுத்து.வளர்த்தெடுத்த சம்பவத்தை மிக நேர்மையோடு பதிவிட்டுள்ளார் மாரி. வன்முறை ரத்த ஆறாக ஓடுவதால் இது குழந்தைகளுக்கான படமில்லை.
திறமை என்ற மூன்றெழுத்து முன் சாதி என்ற இரண்டெழுத்து தோற்றுப்போகும் என்பதை இந்தப் பைசன் சத்தியம் செய்து சொல்கிறான். அதற்காக பைசனை நாம் கொண்டாடியே ஆகவேண்டும்
4/5
-வெண்பா தமிழ்

