சத்தம் யுத்தம் ரத்தம் என மலையாளத்திலிருந்து ஒரு ஆக்சன் பேக்கேஜாக வந்திருக்கிறது காட்டாளன்
யானைகளை கொன்று தந்தம் கடத்தும் தொழில் செய்கிறார் வில்லன் சுனில். அந்தத் தொழிலில் அவருக்கு எதிராக களத்திலிருக்கிறார் கபீர் துகான். இருவருக்கும் தொழில் போட்டி பெருந்தீயாக வளர்கிறது. இதில் கபீர் துகான் டீமில் களமிறங்குகிறார் ஹீரோ ஆண்டனி வர்கீஸ்! யானைகளின் தந்தத்திற்காக அடிமைகளாக வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களை மீட்கும் வேலையிலும் ஹீரோ ஈடுபடுகிறார். தீயோர் கூட்டத்திலிருந்து நல்லது செய்யும் ஹீரோவை விடுவார்களா என்ன? வில்லன்கள் ஹீரோவை திட்டம் தீட்டி கட்டம் கட்ட, ஹீரோ எப்படி தீயோர் கூட்டத்தை வெல்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை
பில்டப்களால் செதுக்கப்பட்டுள்ளார் ஹீரோ ஆண்டனி வர்கீஸ்! பில்டப்களில் கூட அவர் பெரிதாக பில்டப் காட்டவில்லை. இன்னும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கலாம். ஆனால் ஆக்சனில் அனல் பரத்தியுள்ளார். சுனில் வில்லன் ரோலில் அதகளம் செய்துள்ளார். ஹீரோவிற்கு உதவும் கேரக்டரில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன் சண்டைக்காட்சிகளில் பின்னியெடுத்துள்ளார். கபீர் துகான் சிங், ராஜ் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு நல்ல மைலேஜ்!
மலையாள தேசத்தின் வனப்பகுதியை நம் கண்கள் வழியாக மனதிற்குள் ஆழமாக பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரெனடைவ்! அவரின் தரமான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம்! இசையமைப்பாளர்
ரவி பஸ்ரூர் KFG ரெபரன்ஸில் இசைத்துள்ளார். சில இடங்களில் சத்தம் என்பது ஒரு குறை
இயக்குநர் பால்ஜார்ஜ் கதையைப் பின்னுக்கு தள்ளிவிட்டு தேர்ந்த மேக்கிங்-ஐ மட்டுமே முன்னெடுத்துள்ளார். ஆங்காங்கே திரைக்கதையில் சில சுவராஸ்யங்கள் இருந்தாலும் மெயின்கதையில் இன்னும் ஆழமிருந்திருக்கலாம்! ஆக்சன் விரும்பிகள் நிச்சயமாக கொண்டாடுவார்கள்! நம்மூர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் வருகிறார். அதுவும் நன்றாக இருக்கிறது
3/5
-வெண்பா தமிழ்
