ஹைக்கூ கவிதைகளில் முதல் இரண்டு வரிகளில் சொன்ன விசயத்தை அப்படியே உடைப்பதாக மூன்றாவது வரி இருக்கும். ஹைக்கூவின் சிறப்பே அதுதான். ஒன்றை எதிர்பார்க்க வைத்து வேறொன்றைத் தரும். கிட்டத்தட்ட காதலும் அப்படித்தான். காதலில் எப்போது என்ன நிகழும் என்பதை காதலர்களால் கூட கணிக்க முடியாது. அதனால் தான் இயக்குநர் யுவராஜ் சின்னசுவாமி இந்தப்படத்திற்கு இந்த டைட்டில் வைத்துள்ளாரோ என்னவோ?
படத்தின் கதை ஹைக்கூ போல ரொம்ப சிறியது தான். ஆனால் அதன் வீரியம் பெரியது.
ஹீரோ ஏகன் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். அங்கு அவர் வாழ்வில் ஒரு பெண் வருகிறார். அவரின் வருகைக்குப் பிற்பாடு ஏகன் வாழ்வில் ஆல்ரெடி ஒரு பெண் இருந்துள்ளாள் என்பது தெரியவருகிறது. அவரின் முதல் காதலின் ஆழம் அடுத்த காதலில் இருந்ததா? அப்படி இருந்தாலோ இல்லை என்றாலோ அதன் சாதகபாதகம் என்ன என்பதை படத்தின் திரைக்கதை பேசுகிறது
ஹீரோ ஏகன் “இவர் நம்ம வீட்டுப் பையன் பா” என்ற எண்ணத்தை இந்தப்படத்திலும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். ஒரு எதார்த்தமான நடிகர் என்ற குவாலிட்டியை பல இடங்களில் தருகிறார். நாயகிகள் ஸ்ரீதேவி, பெமினா இருவருமே கேரக்டரின் சாராம்சத்தை உணர்ந்து ஆகச்சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஏகனின் நண்பர் கேரக்டர் உள்பட எல்லோரும் கொடுத்த வேலைக்கு நியாயம் செய்துள்ளனர்
இந்தப்படத்தின் ஆன்மா இசைஞர் சித்துக்குமார் தான். அட்டகாசமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். பாடல்கள் அனைத்துமே காதல் வைப்! ஒளிப்பதிவாளர் காதல் நிரம்பி வழியும் பிரேம்களை வைத்து அசத்தியிருக்கிறார்
இயக்குநர் ஒரு கம்ப்ளீட் காதல் கதையை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பை திரையெழுத்தில் காட்டியிருக்கிறார். அது பல காட்சிகளில் நன்றாகவே வொர்க் ஆகியுள்ளது. கல்லூரி காதலில் இருக்கும் இன்ட்ரெஸ்டிங் அடுத்த காதலிலும் ஹிப்ட் ஆகி வந்திருப்பது சிறப்பான ஒன்று! குட்டி குட்டி எமோஷ்னலில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஒளிவுமறைவற்ற அன்பு தான் ஒளிமயமான காதலை உருவாக்கும் என்று மெசேஜ் சொல்லியுள்ள இந்த ஹக்கூவிற்கு “ஒரு அடடே ஆச்சர்யக்குறி” இடலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

