காக்கி சர்க்கஸ்- விமர்சனம்

சும்மா குட்டி குட்டி எபிசோடுகளில் ஒரு திருடன் போலீஸ் விளையாட்டு

கோயமுத்தூரிலுள்ள ஒரு போலீஸ்டேசனில் கேரளா கண்ணகி கோவிலுக்கு என்று ஒரு உண்டியல் வைத்திருக்கிறார்கள். கைதிகள் போலீஸ் என பலரும் அந்த உண்டியலில் காசு போடுவார்கள். ஒருநாள் அந்த உண்டியல் திருடு போய்விடுகிறது. இது கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்தாலோ…பொது மக்களுக்குத் தெரிந்தாலோ இது பெரும் பிரச்சனை என்பதால் காவல்துறை இதை மூடி மறைக்கிறது. மேலும் உண்டியலை யார் திருடினார் என்ற இன்வெஸ்டிகேசன் ஈகோ, போட்டி என கதை போகிறது. முடிவில் காவல்துறை திருடனை நெருங்கியதா என்பதே மீதிக்கதை

கதையின் நாயகன் சுபாஷ் செல்வம் சற்று மிகையான நடிப்பைக் கொடுத்தாலும் சில இடங்களில் தேறிவிடுகிறார். வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார் கன்ட்ரைக்டர் வேடம் ஏற்றுள்ள மலையாள நடிகர். பல காட்சிகளில் அவர் முத்திரைப்பதித்துள்ளார். போலீஸ்டேசன் எங்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் போலீஸாக முனிஷ்காந்த் அசத்தியுள்ளார். கெளதமி, அம்ருதா என இரு நாயகிகள் சீரிஸில். இருவருமே கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை

சிக்கனமான சினிமாட்டோகிராபி என்றாலும் பெரிதாக துருத்தவில்லை. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரெவியை பாராட்டலாம். கதையின் இயல்பான பயணத்திற்கு உதவி செய்துள்ளது விபின் பாஸ்கரின் பின்னணி இசை

போலீஸ்டேசனில் கோவில் உண்டியல் என்ற ஐடியா புதுசாக இருந்தாலும் அமீன் பேரிப்பின் திரைக்கதையில் எமோஷ்னலும், விறுவிறுப்பும் கூடிவரவில்லை. “இந்த விசயத்துக்கா இவ்ளோ பில்டப்?” என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. இந்த ஐடியாவை வைத்து இன்னும் சீரியசாக எழுதி எடுத்திருந்தால் சீரிஸ் கவனம் பெற்றிருக்கும்

ஓஹோவென வராமல் ஒகேவாக வந்துள்ளது காக்கி சர்க்கஸ்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *