இருபத்தெட்டு வயதில் கவிப்பேரரசு எழுதிய நூல்
‘மொழியால் தான் நமக்கு வாழ்வு’ என்று தீர்மானித்தபின் மொழி சார்ந்து கவிஞர் கொடுத்துள்ள உழைப்பு, உயர நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பாடம்
வடுகப்பட்டியில் பள்ளிப்படிப்பின் போதே கவிதை வாய்க்கப்பெற்ற கவிஞர், சென்னை வந்து பச்சையப்பன் கல்லூரியில் விருச்சமாகும் வரை தன் வாழ்வில் நடந்தவற்றையும், அதன்பின் இலக்கியத் தொடர்பும், மொழி மணத்து, விழி வியக்க வைக்கும் அவரது எழுத்து அவரை பாரதிராஜாவிடம் இணைத்தது வரையும் எழுதியிருக்கிறார். ” ஒரு எளிய பறவை வானம் வாங்கிய நிஜம்” இந்த நூல்.
உறுதி என்பது நம்மை விட்டு உதிராமலிருக்க, நமக்கு முயற்சியும் பயிற்சியும் தான் முதல் தேவை. “நமக்கு திறமை இருக்கும் வரை வாய்ப்பு வரும். வாய்ப்பு அமையும் வரை உரம் போட்டு உழைக்க வேண்டும்”. இந்த அர்த்தமுள்ள மந்திரத்தை பாட்டுப்பாடம் எடுக்கிறது கவிப்பேரரசுவின் வாழ்வு
அவர் தமிழ்தொட்டு, புகழ் எட்டியதை கூறும் வரலாற்றின் நடுவே, அவருக்கும் பொன்மணி அம்மையாருக்கும் உள்ள காதல் வரலாறு இருக்கிறதே.. ஆஹா என்னவொரு உணர்வுச் சித்திரம் அது!!
காதலன் என்பவன் வெறும் கனவுகளை உற்பத்திச் செய்து கானல் நீரில் நனைந்தால் போதுமா? தன் காதலை காப்பாற்ற அவன் நிஜத் தீயில் அல்லவா நீந்த வேண்டும்?
தமிழ் படித்து அரசு வேலை பெற்ற கவிஞருக்கு, சொந்தங்களில் நல்ல நல்ல வரன்கள் வருகின்றன. பொன்மணி அம்மாவிற்கும் வேறு வரன்கள் வருகின்றன. இருவரின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை.
ஒரு நன்னாளில்
கவிஞர், பொன்மணி அம்மாவிடம் சொல்கிறார், “வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி நம் திருமணம்” என்று. பெற்றோர்கள் சம்மதமற்ற தன் காதல் திருமணத்தை, தனி ஆளாக கவிஞர் நடத்துவற்கு எடுத்துக்கொண்ட முயற்சியும் பேரன்பும், காதல் என்பது அன்பு நிறைந்த கமிட்மெண்ட் என்பதை புரிய வைத்தது
இவர்களின் காதல் அத்தியாயத்தை வாசிக்க வாசிக்க, கவிப்பேரரசு மற்றும் பொன்மணி அம்மையாரின் பால்ய காலத்திற்குள் சென்று வந்த உணர்வு. இவர்களின் வாழ்வு மற்றும் காதல் அத்தியாயத்தை வாசிக்கையில், நமது அப்பா அம்மா வென்று வந்த கதையை, பிள்ளைகள் நாம் பெருமை பொங்க கேட்பது போன்ற உணர்வே எனக்கு வாய்த்தது. தங்கள் திருமணத்தை உறுதி செய்ததை கவிஞர் இப்படிக் குறிப்பிடுகிறார், “எங்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படவில்லை. நிச்சயிக்கப்பட்ட இடம் சொர்க்கமானது”. உரைநடை முழுதும் கவிநடை. Love it
மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு அலுவலகத்திற்கு வந்த, கவிஞருக்கு முதல் பாடலுக்கான வாய்ப்பு வருகிறது. ஓட்டல் அறைக்குள் இளையராஜா அமர்ந்துள்ளார். பாரதிராஜா சூழலைச் சொல்கிறார். மூன்று முறை கவிஞர் ட்யூனை கேட்கிறார். ஹீரோ மூன்று முறைக்குப் பிறகு சிலிர்த்தெழுவது தமிழ் சினிமா கலாச்சாரம் அல்லவா?
நான்காவது முறை கவிஞர் தமிழால், ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது” என சிலிர்த்தெழுகிறார். அந்தச் சிலிர்ப்பு தமிழ் சினிமாவின் பாட்டு வரலாற்றில் ஓர் இலக்கிய வீச்சு. அதன் சாரமும் தீரமும் இன்னமும் குறையவில்லை.
திரை சார்ந்து எந்தப் பின்புலமும் இல்லாமல், எந்தப் பிரபலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து பாட்டு உலகில் பேரரசாக வந்த கவிப்பேரரசுவின், இருபத்தெட்டு வருடமே ஆன இந்த வரலாற்று நூல், என்போன்ற எளிய பின்னணி கொண்ட கலைஞர்களுக்கு பொன்னூற்று. அள்ளிப்பருகினால் கனவை நோக்கி ஓடும் உத்வேகம் உடனே கிடைக்கும்
இதுவரை நான்- எதுவரை ஆனாலும் வைரமுத்து கவிப்பேரரசு தான் ❤️

