மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை நூலுக்கு அடிமையாய் இருந்த காலம் ஒன்றுண்டு. இப்பவும் அந்த நூல்மேல் அதேயளவு காதல் உண்டு. சமீபத்தில் புதியபடம் ஒன்றுக்காக பாடல் எழுதும் பணியில் இசைஞர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மு.மேத்தா பாடல் வரிகளை நினைவுப்படுத்தினார். முக்கியமாக ராஜராஜ சோழன் நான் பாடலில் “கள்ளூறப் பார்க்கும் பார்வை உள்ளூறப் பாயுமே.. ” என்ற வரிகள் இருவருக்குமே பிடித்தவை. மேலும் அவரின் சொல்லாடல்களை சிலாகித்துக்கொண்டே இருந்தோம். ஒரு புதிய படத்திற்கான காதல் பாடலை மு.மேத்தா ஸ்டைலில் பண்ணலாம் என்றார் நிவாஸ் சார்.
“கூயில் கூவக் கண்டு சேவல் முயன்ற கதை” என மனது சொன்னாலும் நிவாஸ் சார் சொன்னால் அதில் நிச்சயமாக பேரர்த்தம் இருக்கும். உடனே மு.மேத்தா அய்யாவின் பாடல்களை கேட்டபடியே என் வீட்டு குட்டி லைப்ரேரியில் கண்ணீர் பூக்களைத் தேடினேன். ஆனால் கைகளுக்கு “என்னுடைய போதி மரங்கள்” என்ற நூல் கிடைத்தது. இது மு.மேத்தா நமக்கருளும் போதிமரம் என உணர்ந்து வாசிக்கத் துவங்கினேன்
ஒரு பாடலாசிரியனுக்கு சந்தத்தில் விளையாடும் வித்தை கைவர வேண்டும். அதில் மு.மேத்தா மாஸ்டர். இந்த நூலில்,
“அடித்தவரின் கை வலிக்கு நான் மருந்து போட்டேன்
அடிபட்ட காயங்களை நான் காட்ட மாட்டேன்”
“ராத்திரியில் கூடுகிற
ராஜ சபை நூறு
வெற்றிகளும் நியாயங்களும் விடிந்தவுடன் வேறு” இந்த வரிகளை வாசிக்கும் போதே ஒரு ஓசையெழும். அதுதான் மு.மேத்தா.
“புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சுதந்திர தினவிழா” என்றார் வைரமுத்து. பலர் அந்த சுதந்திரத்தில் கை வைத்து நய் நய் என நச்சரித்தார்கள். மேத்தா போன்றவர்கள் தான் நல் கவிதைகளால் அந்த சுதந்திரத்திற்கு மொய் செய்தார்கள்
“தீபங்கள் தீர்ந்து போகலாம். ஆனால் இன்னும் மீதமிருக்கிறது என் கை நிறைய ஒரு சூரியன்” இந்த நூலும் ஒரு சூரியன் தான்
1987-ல் வெளியான கவிதை நூல் இது. நான் பிறந்தும் தவிழ்ந்திருக்காத காலம் அது. 39 ஆண்டுகளுக்குப் பின் எனக்குப் பாடமெடுக்கிறது
நன்றி மு.மேத்தா அய்யா

