எல்லா தனிமனித வாழ்விலும் அரசியல், உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் கலந்தே வரும். கலைஞர்களின் வரலாறுகளில் அவை கூடுதலாக இருக்கும்.
அவர்களின் வரலாற்றில் சமூகத்தின் சில முக்கிய நிகழ்வுகளில், அவர்கள் பார்வையாளர்களாக இல்லாமல், பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். அதனால் சில வரலாற்று நிகழ்வுகளை, வேறு கோணத்தில் நாம் காண முடியும். இந்த நூலில் பெரியாரின் மன மாற்றம் சம்பந்தமாக அப்படியொரு நிகழ்வை அறிய முடிந்தது. அதன் காரணம் அறிஞர் அண்ணாவின் அரசியல் அணுகுமுறை எனலாம்.
ஒரு காலத்தில் அவ்வை டி.கே சண்முகத்தின் நாடகங்களை பெரியார் ஆத்மார்த்தமாகப் பாராட்டுகிறார். அவ்வை சண்முகம் குடும்பம் நிகழ்த்தும் நாடகங்கள் எல்லாமே பக்தி நாடகங்கள். எனினும் பெரியார் அவற்றில் உள்ள களைகளை மீறி, நாடக நிகழ்த்துக்காரர்களின் கலையை ரசிக்கிறார். காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணாவும் அப்படியே.
காலங்கள் சிறிது கடக்கவும், அண்ணா பெரியார் பிரிவு நிகழ்கிறது. அப்போது நாடக படைப்பாளர்கள் ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள். அண்ணா மாநாட்டுக்கு ஆதரவளிக்கிறார். பெரியார் மாநாட்டை எதிர்க்கிறார். அண்ணாவின் ஆதரவிற்கு காரணம் பெரியாரின் எதிர்ப்பு அல்ல. ஆனால் பெரியார் மாநாட்டை எதிர்த்ததிற்கு காரணம், அண்ணா மாநாட்டை ஆதரிக்கிறார் என்பதே.
இந்த நிகழ்வால் மனம் வருந்தும் அவ்வை சண்முகம், பெரியாரைச் சந்திக்கத் துடிக்கிறார். பெரியார் வாய்ப்பளிக்கவில்லை. மேலும் அவ்வை சண்முகத்தின் முதல் மனைவிக்கு காலரா வந்ததால், யாரும் வீடு கொடுக்க முன் வராத போது, பெரியார் தனது புதிய கட்டடம் ஒன்றை கொடுக்கிறார். இப்படி பெரியாரின் நட்பையும், சின்ன மன வருத்தத்தையும் பதிவு செய்கிறது நூல்.
மேலும் 1948 ஜனவரி 18,19-ல் தமிழ் மகாண மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் தெற்கே குமரிமுனையும், வடக்கே வெங்கடமும் உள்ள தமிழ்நாடு வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் மா.பொ.சி . இதை காமராஜர் தவறாக புரிந்துகொண்டு , மா.பொ.சி கருத்தை நிராகரித்ததோடு, அவரை மேடையில் வைத்துக்கொண்டே பேச விடாமல் கண்டிக்கிறார். அந்த இடத்தில் மா.பொ.சி மாண்பை கடைப்பிடிக்கிறார். அதன்பின் தன் தவறை உணர்ந்து காமராஜர் மா.பொ சியை ஏற்கிறார். காமராஜர் டக்கென கோபப்படக்கூடியவர். உடனே துறக்கவும் செய்பவர். அந்த மாநாட்டில் இன்னும் இதுபோல நிறைய வரலாற்று நிகழ்வு பதியப்பட்டிருக்கிறது.
அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை வரலாறு என்றாலும், இந்த வரலாற்றின் வழியே தமிழகத்தின் நாடகக்கலை வரலாற்றையும் சேர்ந்தே கற்கிறோம். திரைப்படம் வருவதற்கு முன் மேடை நாடகங்கள் செய்த மாற்றங்களும் ஏற்றங்களும் ஏராளம்.
அவ்வை சண்முகம் அவர்களின் சகோதர பாசமும், அவர்கள் தம் கலையார்வமும், தொழில் நேர்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவ்வை சண்முகத்தின் மொழிநடை, இதமான புல்தரையில் நம்மை அழைத்துச் செல்வது போல, சொல் தரையில் அழைத்துச் செல்கிறது.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்குழுவில் துவங்கும் அவ்வை சண்முகம் அவர்களின் கலைப்பயணம், படிப்படியாக வளர்ந்து உயர்ந்துள்ளது. அந்த உயரத்திற்குப் பின்னால் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பு இருக்கிறது என்பது இந்த நூலில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம்❤️

