சே குவேரா வேண்டும் விடுதலை!

க்யூபா எனும் அற்புதத்தீவை காண்கிறார் கொலம்பஸ். உடனே ஸ்பெயின் மகாராணிக்கு தந்தி அடிக்கிறார். ஸ்பெயின் கியூபாவை வளைக்கத் துவங்குகிறது. அதிகாரத்திற்கு இணங்க மறுத்த பூர்வீக பழங்குடியின கியூபர்களை கொன்று குவிக்கிறார்கள். 1511 முதல் கியூபாவில் ஸ்பெயினின் ஆதிக்கம் துவங்குகிறது. அதன்பின் லத்தீன் ஸ்பெயினிடம் போரிட்ட கியூபாவை கைப்பற்ற முனைகிறது. அதை ஸ்பெயின் விடவில்லை. ஆனால் காலம் மாறி காட்சியும் மாறுகிறது. அமெரிக்கா கியூபாவை குறிவைத்து ஸ்பெயினிடம் காய் நகர்த்துகிறது. அமெரிக்காவிடம் கியூபாவை கொடுக்க மறுத்தது ஸ்பெயின். ஆனால் அமெரிக்கா விடுமா என்ன? பெரும் போர் நடத்தி கியூபாவை கைக்குள் கொண்டு வந்தது. அதன்பின் கியூபாவை சூறையாடியது அமெரிக்கா. காலணி நாடாக க்யூபாவை நடத்தி வந்த அமெரிக்கா ஒரு டம்மி அரசாங்கத்தை அங்கே நிறுவி பாடிஸ்டா எனும் டம்மி பீஸை தலைவராக்கி க்யூபாவின் வளங்களை ஆட்டையப்போட்டது. அதை ஓட்டைப்போடுவதற்காக கிளர்ந்தெழுகிறார் பிடல் காஸ்ட்ரோ. க்யூபாவின் அமெரிக்க கைப்பாவை அரசை எதிர்க்கும் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார் சே குவேரா.

அர்ஜெண்டினாவில் பிறந்த சே சிறுவயதிலே ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர். இளம் வயதிலே சிறு வட்டத்திற்குள் வாழ விரும்பாத ஜீவன் சே!கம்யூனிசம் சார்ந்த நூல்கள் அவரை விடுதலை தான் பேரின்பம் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. 1928-ல் பிறந்த சே 1955-ல் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்கிறார். அவர்களின் உரையாடலில் நெருப்புச் சுவாலை!

தன் பொதுநலன் சார்ந்த வீரதீர செயல்கள் மூலம் காஸ்ட்ரோவின் பெரும் நம்பிக்கையைப் பெறும் சே க்யூபாவை மீட்கும் போர்களுக்கு தலைமை தாங்கி வெற்றியும் காண்கிறார். அதன்பின் அவரது விடுதலை வேட்கை இன்னும் அதிகமாகிறது. அமெரிக்காவின் கைக்குள் அகப்பட்டு கிடக்கும் மற்ற நாடுகளுக்கும் புரட்சியை விதைக்க வேண்டும் என நினைக்கிறார் சே. இடையிடையே காதல் கல்யாணம் என அகவாழ்வும் செல்கிறது.

க்யூபாவில் நினைத்ததை அடைந்து விட்டோம் என்பதை உணரும் சே க்யூபாவிலிருந்து விடைபெற்று பொலிவியா செல்கிறார். ஆனால் க்யூபா மக்கள் போல பொலிவியா மக்களுக்கு புரட்சியின் தேவையும் சேவையும் புரியவில்லை. அமெரிக்கா, “சே குவேரா ஆகப்பெரும் ஆபத்தானவர்” என்பதை உணர்ந்து அவர் பொலிவியா போய் புரட்சியை ஏற்படுத்தினால் நமது அதிகாரப்பிடி படிப்படியாக நழுவும் என அஞ்சுகிறது. அதனால் பொலிவியா அரசோடு கள்ளக்கூட்டணி போட்டு சே குவேராவை கைது செய்கிறது

கைது செய்யப்பட்டு ஒரிடத்தில் சங்கிலியோடு கிடக்கும் சேகுவேராவிற்கு உணவு கொண்டு செல்கிறார் ஒரு ஆசிரியர். அவரிடம் சே “இது எந்த இடம்?” என்கிறார். ஆசிரியர் இது பள்ளிக்கூடம் என்கிறார். “ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது. இங்கே எப்படி வகுப்பு நடத்துகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதுவரை சே குவேராவை பரிதாபத்தோடு பார்த்த ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டு பார்க்கிறார். சே தொடர்கிறார், “கவலை வேண்டாம். ஒருவேளை நான் பிழைத்திருந்து புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நான் உங்களுக்கு நல்லப்பள்ளிக்கூடம் கட்டித்தருகிறேன்” என்கிறார். ஜுலியா எனும் அந்த ஆசிரியர் அழுதுகொண்டே வெளியில் செல்கிறார்.

இந்த ஒற்றைக்காட்சி நம்மை உலுக்கிவிடுகிறது. க்யூபா விடுதலை அடைந்த பின் அங்குள்ள மக்களுக்கு நிலங்களை பிரித்தளிக்க எடுத்த முயற்சியைப் போலவே எல்லோருக்கும் கல்வியை பகிர்ந்தளித்தார் சே குவேரா. அதன் நீட்சி தான் இந்தக்காட்சி!

மருதன் அவர்களின் எழுத்தில் அலாதி பிரியம் உண்டு நமக்கு. ஏனென்றால் வரலாற்று சார்ந்த எழுத்தில் கூட தேன் தடவும் மாயக்காரர் அவர்! ஒரு விறுவிறு திரைக்கதை படித்ததைப்போன்று இருந்தது நூல்!

மானுட விடுதலையோ தேசிய விடுதலையோ, அது சும்மா கெத்தாக பேசியவுடன் வருவதில்லை. அதற்கென அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அஞ்சாமை குணமும் ஒரு தலைவனுக்கு வேண்டும்! சுயநலமில்லா மக்கள் நலன் மனதில் உயிராய் தகிக்க வேண்டும். சே குவேராவிற்கு அது இருந்துள்ளது!

தவறவிடக்கூடாத நூல்🤍🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *