கம்யூனிசத்தை எளிதாக நமக்குள் கடத்தும் புத்தகத்தை தோழர்கள் பலரிடமும் கேட்டிருந்தேன். இந்தவருட புக்பேரில் ஒருவர் இந்த நூலைப் பரிந்துரைத்தார்
முதலாளி வர்க்கத்தை வெறும் போனஸ் மற்றும் சம்பள உயர்வுக்காக மட்டுமே கம்யூனிஸ்ட் எதிர்க்கவில்லை என்பதிலிருந்து, அன்றும், இன்றும், என்றும் ஏன் கம்யூனிசம் நமக்குத் தேவை என்பதை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் இரா.பாரதிநாதன்
நம் வேண்டுதலின் மூலமோ கடவுளின் சிருஷ்டியாலோ தான் இந்த உலக இயக்கம் நடக்கிறது என்றால் அது கருத்து முதல்வாதம்
மனிதர்களின் அறிவாலும் உழைப்பாலும் மட்டுமே உலகம் இயங்குகிறது என்பது பொருள்முதல் வாதம்.
கருத்து முதல் வாதம் மதங்களின் முன் நிற்கும். பொருள்முதல் வாதம் அறிவியலின் முன் நிற்கும். இவ்விரண்டிற்குமான அரசியல் வரலாற்றைத் தோண்டியெடுத்து சிறப்பாக நமக்குள் கடத்துகிறார் இரா.பாரதிநாதன்.
நூலாசிரியரான இரா.பாரதிநாதன் 5-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்று பின்னட்டை சொல்கிறது. அதனால் தான் ‘யாம் கற்ற கம்யூனிசம் எளிதாக எல்லோர்க்கும் தெரியவேண்டும்’ என்ற வேட்கை அவரது எழுத்தில் தெரிகிறது
தனது தொழில் விசைத்தறி நெசவு என்பதால் உழைப்புச் சுரண்டலைப் பற்றி அவர் தொழிலை முன் வைத்தே குறிப்பிடுகிறார்.
ஒரு வேட்டி தயாரிக்க தேவையான கச்சாப்பொருள்களின் விலை 40 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்தப் பொருட்களை வைத்து வேட்டி தயாரிக்கும் தொழிலாளிக்கு கூலி 10 ரூபாய். வேட்டியின் விலையை 100 ரூபாய் நிர்ணயம் செய்கிறார் முதலாளி. பத்து ரூபாய் கூலி பெறும் தொழிலாளி தான் 50 ரூபாய் லாபத்திற்கு காரணமாகிறான். இதைத்தான் உழைப்புச் சுரண்டல் எனச்சுட்டுகிறது கம்யூனிசம். முக்கியமாக நிலத்தானம் செய்யும் இயக்கம் ஏன் வந்தது என்பதற்கான காரணிகளையும் அதை சுற்றி நடந்த அரசியலையும் அழகாக தோலுரித்துள்ளார்.
வெல்கிறதோ..
வீழ்கிறதோ பாட்டாளி வர்க்கம் சற்றேனும் நெஞ்சை நிமிர்த்த காலந்தோறும் கம்யூனிசம் தேவை என்பதை தெளிய வைக்கிறது நூல்👌

