ராப் பாடல் மூலம் சமூகத்துக்கு பாடமெடுக்கும் படம்
ஹீரோ அர்ஜுன் பிரபாகரன் ஒரு ராப் பாடகராக முயற்சி செய்கிறார். அது நடக்கவும் செய்கிறது. அது நடக்கும் போது தனியார் பள்ளி ஆசிரியையான ஹீரோயின் ஆராதியா மீது அவருக்கு காதல் வருகிறது. ஆராதியாவும் காதலுக்கு ஒகே சொல்கிறார். இவர்கள் காதல் பயணத்தின் நடுவே ஹீரோயின் வேலை செய்யும் தனியார் பள்ளியின் மேலாளர் சுப்பிரமணியசிவா ஒரு பெரும் சம்பவத்தை அரங்கேற்றுகிறார். அதனால் ஹீரோ & ஹீரோயின் வாழ்வில் பல பிரச்சனைகள். அவற்றிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதும் பிரச்சனைகளுக்கு ராப் பாடல்கள் எப்படி உதவுகிறது என்பதுவுமே படத்தின் மீதிக்கதை
பேட்டில் என்றால் வார் என்பார்கள். ஆனால் வார் வீரனாக ஜொலிக்க வேண்டிய அர்ஜுன் பிரபாகரன் நிறைய இடங்களில் சொதப்புகிறார். நடிப்பில் இன்னும் அவருக்கு பயிற்சி தேவை. ஆராதியா ஒருசில இடங்களில் கவர்ந்தாலும் இன்னும் நல்ல நடிப்பை அவர் வழங்கியிருக்கலாம். வில்லனாக சுப்பிரமணிய சிவா மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு காட்சியில் தனது சிறந்த ‘கடிப்பை’யும் கொடுத்துள்ளார்.
ஜீவாவின் இசையில் ஏனோ ஜீவினில்லை. ஒருசில ராப் சாங்ஸ் ஒகே ரகம்! ஒளிப்பதிவாளர் கிடைத்த பட்ஜெட்டில் நல்ல விஷுவலை கொடுக்க ரொம்பவே போராடியிருக்கிறார்
பள்ளிகளில் ஈசியாக புழங்கும் போதைப்பொருள் கலாச்சாரம், தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு வேலையில் கொடுக்கப்படும் அதீத அழுத்தம் ஆகியவற்றை இயக்குநர் நாராயணன் பா அக்கறையோடு பதிவு செய்ய நினைத்தது பாராட்டுக்குரியது தான். ஆனால் அந்த நல்ல சிந்தனை தேர்ந்த கலைப்படைப்பாக உருப்பெறவில்லை. தேவையான கதையை எடுத்த இயக்குநர் தேவையான அளவிற்கு திரைக்கதை மேக்கிங் இரண்டிலும் கவனம் செலுத்தியிருந்தால் பேட்டில் பந்தயம் அடிச்சிருக்கும்
2.5/5
-வெண்பா தமிழ்

