கடந்த 20 நாட்களாக அம்பேத்கரின் புத்தமும் அவர் தம்மமும் நூல் வாசித்து வருகிறேன். திடீரென வந்த ஒரு வேலை காரணமாக பாலஸ்தீன கவிதைகள் வாசிக்கவேண்டி வந்தது. பாலஸ்தீன வரலாறு கொஞ்சம் பரிச்சயம் என்பதால் இந்தக் கவிதைகளின் குணத்தையும் ரணத்தையும் சினத்தையும் எளிதாக உள்வாங்க முடிந்தது. நூலில் 108 கவிதைகளை 30 கவிஞர்கள் எழுதியுள்ளனர். மிகச்சிறப்பாக தேர்ந்தெடுத்து தமிழ்ப்படுத்தியுள்ளார் எம்.ஏ.நுஃமான்
“ஒருநாள் காலையில் அலையின் நுனியில் ஏறி நாம் திரும்பிச் செல்வோம்”
-அபூ சல்மா எழுதிய வரிகள் இவை. இழப்பிற்குப் பிறகு பிறரால் நமக்குள் எழும் நம்பிக்கை என்பது வேறு. இழப்பு நிகழும் போதே பெரு நம்பிக்கையோடு, சுயமாய் எழுவது என்பது வேறு. இழப்பின் போதே எழ வைக்கும் வரிகளை அபூ சல்மா போலவே
ஓ பத்தாயிரம் கைதிகளே என்ற தலைப்பில் தெளஃபீக் சையத்தும் எழுதியுள்ளார்.
“நான் வாழ்வேன்
உயிர்த்துடிப்புடன் இருப்பேன்
அசையும் சிறு காற்றில்,
ஒரு பூவில், பச்சைப்புல் இதழில், ஓடும் நீரின் ஒரு சிறு தாரையில்
இடையன் ஒருவனின் புல்லாங்குழலில்,
சூரிய ஒளியில், மெளனத்தில் ,
அசையும் இறக்கைத் துடிப்பில் நான் வாழ்வேன்” என்றெழுதுகிறார் அவர்.
ஒரு பறவையின் கழுத்தை அறுக்கும் போது அதன் இறக்கை துடிக்கும். அந்தத் துடிப்பில் கூட ஒரு போராளி வாழ்வான் என்பதாக இந்த வரிகளை நான் புரிந்துகொண்டேன்
மரணத்தை பின்வாசல் வழியாக அனுப்புவது வீரர்களுக்குப் பிடிக்காது. ஆனால் பாரத வரலாறு முதல் இலங்கை வரலாறு வரை பின்வாசல் வழியாகத்தான் வெற்றியை ருசித்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
மிகப்பிரமாதமான புத்தகம்

