பிபி180- விமர்சனம்

நேர்மைக்கும் ரவுடியிசத்துக்கும் நடக்கும் யுத்தம் தான் மொத்தக்கதையும்

அரசு மருத்துவமனையில் நேர்மையான மருத்துவராக பணியாற்றுகிறார் தான்யா ரவிச்சந்திரன். அப்போது சென்னையின் முக்கிய புள்ளியான பாக்கியராஜின் மகள் விபத்தினால் உயிரிழக்கிறார். அவரின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் கேட்கிறார் பாக்கியராஜ். தான்யா ரவிச்சந்திரன் முறைப்படி போஸ்ட்மார்ட்டம் செய்தே அனுப்புவேன் என்கிறார். பாக்கியராஜ் பிரபல ரவுடியும் தனது சிஷ்யனுமான டேனியல் பாலாஜியிடம் உதவி கேட்கிறார். டேனியல் பாலாஜி தான்யா ரவிச்சந்திரனை மிரட்டி போஸ்ட் மார்ட்டம் வேண்டாம் என்கிறார். அதையும் மீறி தான்யா ரவிச்சந்திரன் போஸ்ட் மார்ட்டம் செய்ய டேனியலின் ஈகோ சீண்டப்படுகிறது. அதன் பின் நடக்கும் ஹீரோயின் வில்லன் மோதலே மீதிக்கதை

தனக்கு கிடைத்துள்ள நல்ல கேரக்டருக்கு தான்யா ரவிச்சந்திரன் நியாயம் சேர்க்கும் வகையில் நன்றாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் தரமாக அமைந்துள்ளது. பாவம் நடிப்பில் இன்னும் எவ்வளவோ உயரங்களைத் தொடவேண்டியவர் சென்றுவிட்டார். பாக்கியராஜ் எமோஷ்னல் காட்சிகளில் சற்று மிகையான நடிப்பைத் தந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அருள்தாஸ், தமிழ் உள்ளிட்டோர் ஒகே ரகம்

படத்தின் மூட்-க்குள் நம்மைக் கொண்டுபோக வேண்டும் என்ற முயற்சியில் இசை அமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா கொஞ்சம் அதிகமாகவே வாசித்து விட்டார் போல. நல்ல இசை தான். கொஞ்சம் சத்தத்தைக் குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் நல்ல நல்ல ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். இயக்குநர் ஜேபி மிஷ்கின் உதவியாளர் என்பதால் ஷாட்களில் எல்லாம் மிஷ்கின் பட ரெபரன்ஸ்.

ஒரு அரசு மருத்துவமனையின் நேர்மையான மருத்துவரை வைத்து கதைப் பின்னப்பட்ட விதம் அருமை. ஆரம்பத்தில் எங்கெங்கோ துண்டு துண்டாக சிதறிச் சென்ற காட்சிகளையும் கேரக்டர்களையும் இடைவேளைக்கு முன்பு ஒரே புள்ளியில் இணைத்த விதம் நச். சிலபல லாஜிக் கேள்விகள் தொக்கி நின்றாலும், மனித உயிரை வதைப்பது எளிது, வதைபட்ட உயிரை காப்பாற்றுவது பெரும் கடினம் என்பதை உணர்த்தியதால் பிபி180-க்கு ஒரு சல்யூட் வைக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *