அசுரன்
ராவணன் வீழ்ந்த கதையை, “வீழ்த்தப்பட்ட கதை” என்ற போக்கில் சொல்லியுள்ளார் ஆனந்த் நீலகண்டன்
தன் தகப்பனின் இன்னொரு தாய்க்கு பிறந்த குபேரனிடம் கையேந்தி நிற்கும் நிலை ராவணனுக்கு. தன் சகோதர்கள், தாய் தங்கையோடு அப்படியாக இழிநிலையோடு நிற்கிறான் ராவணன். பின் தனது சேவகன் மற்றும் நண்பனான பத்ரன் செய்யும் சூழ்ச்சி மூலமாக குபேரனை வென்று அதிகாரத்திற்கு வருகிறான் ராவணன். அவனுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண் பிள்ளையால் நம் நாட்டுக்குப் பெரும் சீரழிவு நிகழும் என பிரஹஸ்தன் எச்சரிக்கிறான். ஆனாலும் ராவணன் பெண்பிள்ளை மீது பெரும்பாசம் கொள்கிறான். தன் மனைவியான மண்டோதரியிடம் காதலை காண முடியாத ராவணன் தேவகுலத்தைச் சேர்ந்த வேதவதி என்ற பெண்மீது இச்சை கொள்கிறான். ஆனால் அவள் இணங்கவில்லை. அவள் மீது பெரும்பித்து கொண்டு ராவணன் அலைவதால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைகிறது. அதனால் வேதவதியையும், ராவணனின் பெண் குழந்தையும் ஒருசேர கொலை செய்துவிடுவோம் என்ற முடிவை பிரஹஸ்தன் முன்மொழிய, ராவணனுக்குத் தெரியாமல் இதைச் செய்ய சம்மதிக்கிறான் பத்ரன். வேதவதியை கொல்ல முடிந்த பத்ரனால் ராவணனின் குழந்தையை கொல்ல இயலவில்லை. ஒரு சின்ன விபத்தில் அந்தப் பெண் குழந்தை ஜனகன் கைக்குச் சென்று விடுகிறது. அவள் தான் சீதை. ஆக ராவணன் தன் மகளை மீட்கச் செல்வதாக கதை போகிறது. மொழிபெயர்த்துள்ள நாகலெட்சுமி சண்முகம் செம்மையாக உழைத்துள்ளார்
இந்த நூலில் பத்ரன் என்ற கேரக்டரை ஆசிரியர் வளர்த்தெடுத்த விதம் ஆச்சர்யப்படுத்தியது. வாழ்ந்து கெட்ட மனிதனாக பத்ரன் கதையில் நிறைந்திருக்கிறான்
தன் மனைவி மாலாவை ராவணன் கற்பழித்து விடுகிறான். மாலாவிற்கு ஒரு பிள்ளை பிறக்கிறது. அவன் அதிகாயன். ஆனால் ராவணன் அதிகாயனை மகனாக மதிக்கவில்லை. பத்ரன் அதிகாயனை வேறாக பார்க்கவில்லை. மேலும் மண்டோதரி ராவணனின் குற்றவுணர்ச்சியை கிளறும் காட்சியொன்று மெய்சிலிர்க்க வைத்தது. ராவணனை உத்தமன் என்று சொல்லாத இந்த நூல், ராமனை பலமாக விமர்சிக்கவும் செய்கிறது. குறிப்பாக,
” ராமன் சாதியை முன்னெடுக்கும் ஆகமங்களுக்கு முட்டு கொடுத்து நிற்கிறான். சாஸ்திரத்தை, குலத்தை நம்பியே தன் மனைவியை சந்தேகிக்கிறான். சாம்புவனை கொல்கிறான், தனக்கும் சீதைக்கும் காட்டில் பிறந்த இரு குழந்தைகளை கொல்கிறான். ராமன் தன் மனம் சொல்லியபடி வாழவில்லை. புராணங்கள் வகுத்த விதிகளை காப்பாத்த தன் மனசாட்சியை அடகு வைக்கிறான்” என கடுமையாக சாடுகிறது நூல்.
இந்த நூலை ஏற்போரும் உண்டு எதிர்ப்போரும் உண்டு! எனக்கு இந்த நூலில் எடுத்துக் கொள்ளவும், தடுத்து தள்ளவும் நிறைய கிடைத்தது.
அரசனுக்கு தன் கர்வத்தை காக்கும் மனம் வாய்த்தால் அது அழிவுக்கே இட்டுச் செல்லும். அது ராமனாக இருந்தாலும் சரி..ராவணனாக இருந்தாலும் சரி
it’s Take away

